×

சேலத்தில் நூல் விலை உயர்வு எதிர்த்து 20,000 விசைத்தறிகள் ஸ்டிரைக்: 50 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிப்பு

இடைப்பாடி: சேலத்தில் நூல் விலை உயர்வு எதிர்த்து 20,000 விசைத்தறிகள் ஸ்டிரைக்கில் ஈடுப்பட்டன. இதுகுறித்து இடைப்பாடி ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறியதாவது: விசைத்தறிகளுக்கு பயன்படுத்தப்படும் 10ம் நம்பர், 20ம் நம்பர், 40ம் நம்பர் நூல்களின் விலை 6 மாதத்திற்கு முன்பிருந்ததை விட, தற்போது 75 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் உற்பத்தி விலைக்கு கூட, துண்டுகளை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விலையேற்றத்தை குறைக்க ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தும் எந்த பலனும் இல்லை. எனவே 12ம் தேதி (நேற்று) முதல் வரும் 18ம் தேதி வரை உற்பத்தியை நிறுத்தி, அரசின் கவனத்தை ஈர்க்க வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறோம். இதற்கு சேலம் சுற்றுப்புற மாவட்டங்களில் உள்ள பல்வேறு சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

வரும் 16ம் தேதி கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம்.  இடைப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. தற்போது நடக்கும் வேலை நிறுத்தத்தால் நெசவாளர்கள், சாயம் ஏற்றுபவர்கள், துண்டு முடிச்சு போடுபவர்கள் என்று 50 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு, அறிவித்தபடி நூல் விலையை உடனடியாக குறைக்க வேண்டும். இதற்கு மாநில அரசும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Salem , 20,000 looms strike in Salem over yarn price hike: 50,000 workers affected
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...