கனமழை அறிவிப்பால் ஆம்பூரில் பிரியாணி திருவிழா ரத்து

ஆம்பூர்: தமிழகத்தில் முதல் முறையாக திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் புவிசார் குறியீடு பெறும் நோக்கில் பிரியாணி திருவிழா, சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வர்த்தக மைய கட்டிடத்தில் இன்று துவங்க இருந்தது. இதற்காக அங்கு  20க்கும் மேற்பட்ட பிரியாணி வகைகள், சைவம் மற்றும் அசைவ உணவு பொருட்கள், இனிப்பு மற்றும் கேக்  வகைகள், ஆம்பூர் டீ ஆகியவை கொண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு வந்தது. வரும் 15ம் தேதி வரை இந்த திருவிழா நடக்க இருந்தது. இங்கு மாட்டிறைச்சி பிரியாணிக்கும் ஒரு அரங்கு அமைக்க அனுமதி கேட்கப்பட்டது. இதனால் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் இடியுடன் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்தது. இதன் காரணமாக பொதுமக்கள் இந்த விழாவில் திரளாக பங்கு பெற இயலாத சூழல் உள்ளதாகவும், அதனால் இன்று தொடங்க இருந்த விழாவை  ரத்து செய்து பின்னர் வேறு ஒரு தேதியில் நடத்த உள்ளதாகவும் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

Related Stories: