பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு இறுதி தீர்ப்புக்கு கட்டுப்படும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு இறுதி தீர்ப்புக்கு கட்டுப்படும் என ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. டிஇடி தேர்ச்சி பெற்றோர் நலச் சங்க தலைவர் ஷீலா பிரேம்குமாரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

கட்டாய கல்வி சட்டத்தின்படி, ஆசிரியர் பணி நியமனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியுடன் ஆசிரியர் தகுதித்தேர்வில் (டிஇடி) கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதன்படி ஆசிரியர் பணி நியமனங்களுக்கான டிஇடி தகுதித்தேர்வை ஆசிரியர் தேர்வாணையம் நடத்துகிறது. துவக்க கல்வி மற்றும் சார்நிலை பணி விதிகளின் படி, ஏற்கனவே இடைநிலை ஆசிரியராக நியமிக்கப்பட்டு, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க அனுமதித்துள்ளது.

இதன்படி, பட்டதாரி ஆசிரியர் நியமனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதி இருந்தால் நேரடியாகவோ, பதவி உயர்வின் மூலமோ, துறை வாரியான மாற்றத்தின் மூலமோ நிரப்பப்படுகிறது. இதன்மூலம் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஒருவர் தகுதித்தேர்வு எழுதாமலேயே பட்டதாரி ஆசிரியர் மற்றும் துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறும் நிலை உள்ளது.  ஏற்கனவே டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்று பணி கிடைக்காமல் ஏராளமானோர் உள்ளோம். இதனால், எங்களைப் போன்ற பலரின் வாய்ப்பு பறிபோகிறது. எனவே, இடைநிலை ஆசிரியர்களை, பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க தடை விதிக்க ேவண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர், இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கும் விவகாரம், இந்த வழக்கின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்படும் என உத்தரவிட்டு, மனுவிற்கு பள்ளி கல்வித்துறை செயலர், பள்ளி கல்வி இயக்குநர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 8 வாரம் தள்ளி வைத்தார்.

Related Stories: