×

வரும் 15ம் தேதி பதவியேற்பு புதிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு

புதுடெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை ஆணையராக ராஜீவ் குமாரை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு, செப்டம்பர் 1ம் தேதி முதல் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா இருந்து வருகிறார். நாளை, அதாவது மே 14ம் தேதி அவர் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமாரை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். இவர் வரும் 15ம் தேதி இப்பொறுப்பை ஏற்க உள்ளார்.

இது தொடர்பாக ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜூ வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘அரசியலமைப்பு சட்டத்தின் 324வது பிரிவின், பிரிவு 2ன் படி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தால் இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள்,’ என குறிப்பிட்டுள்ளார். தற்போது தேர்தல் ஆணையராக உள்ள ராஜீவ் குமார், கடந்த 1960ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி பிறந்தார். 1984ம் ஆண்டு ஜார்காண்ட் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான இவர், ஒன்றிய அரசின் பல்வேறு முக்கியமான துறைகளில் 38 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

 இவர் ஒன்றிய நிதித்துறைச் செயலாளராக கடந்த 2019ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். பின்னர், ஒன்றிய மனிதவள மேம்பாட்டு துறையிலும் பணியாற்றினார். கடந்த 2020ம் ஆண்டு தேர்தல் ஆணையராக இருந்த அசோக் லவாசா, தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியான அந்த பதவியில், அதே ஆண்டு ஆகஸ்ட்டில் ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டார். அப்போது முதல் தேர்தல் ஆணையராக பணியாற்றி வந்த ராஜீவ் குமார், தற்போது பணி மூப்பு அடிப்படையில் தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவருடைய பதவிக் காலம் 2025ம் ஆண்டு, பிப்ரவரியில் முடிகிறது.

* எல்லா தேர்தலும் இவர் தலைமையில்...
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் விரைவில் முடிகிறது. புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் ஜூலையில் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தாண்டு இறுதியில் குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. அடுத்தாண்டு தொடக்கத்தில் இருந்து மேலும் மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இவற்றை தொடர்ந்து, 2024ல் மக்களவை தேர்தல் நடக்க உள்ளது. இந்த முக்கியமான தேர்தல்கள் அனைத்தும் புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ராஜீவ் குமார் தலைமையில்தான் நடைபெற உள்ளது.

Tags : New Chief Election Commissioner ,Rajiv Kumar ,President ,Ramnath Govind , New Chief Election Commissioner Rajiv Kumar to take office on 15th: President Ramnath Govind orders
× RELATED தலைமை தேர்தல் ஆணையருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு