இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்பு; சமரச திட்டம் அறிவித்தார் கோத்தபய; முக்கிய எதிர்க்கட்சி கடும் எதிர்ப்பு: மக்கள் போராட்டம் தொடர்கிறது

கொழும்பு: இலங்கையில் மகிந்த ராஜபக்சே பதவி விலகிய நிலையில், அதிபர் கோத்தபயாவின் சமரச திட்டத்தின்படி நாட்டின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நேற்று பதவியேற்றார். எதிர்க்கட்சிகளின் நெருக்கடி, மக்களின் போராட்டத்துக்கு அடிபணிந்து, அதிபர் அதிகாரத்தை குறைக்க 19வது சட்டத் திருத்தத்தை மீண்டும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிபர் கோத்தபய அறிவித்துள்ளார். இருப்பினும், கோத்தபய பதவி விலக கோரி போராட்டம் தொடர்வதால், இலங்கையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு, பசி பட்டினி கொடுமை  உள்ளிட்ட பிரச்னைகளுக்கு காரணமான அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சேவை பதவி விலக வலியுறுத்தி, கடந்த ஒரு மாதமாக கொழும்பு மற்றும் காலிமுகத் திடலில் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு கட்சிகள் தங்களின் ஆதரவை விலக்கிக் கொண்டதால், ராஜபக்சே அரசு பெரும்பான்மையை இழந்தது. கோத்தபயாவும், மகிந்தாவும் பதவி விலகி, அனைத்து கட்சிகளும் அடங்கிய இடைக்கால அரசு அமைக்க கோரி எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின. நெருக்கடி முற்றியதால், பிரதமர் பதவியில் இருந்து மகிந்தாவை ராஜினாமா செய்ய கோத்தபய வலியுறுத்தினர்.

முதலில் ஒப்புக் கொள்ளாத மகிந்தா ராஜபக்சே, வேறு வழியின்றி கடந்த 9ம் தேதி ராஜினாமா செய்தார். அவர் பதவி விலகுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக, சொந்த ஊரில் இருந்து தலைக்கு ரூ.2,000 என வழங்கி, 3,000க்கும் மேற்பட்ட கூலிப்படையினரை அழைத்து வந்த மகிந்த, பிரதமர் இல்லம் அருகே போராட்டம் நடத்திய மக்கள் மீது பயங்கர ஆயுதங்களுடன் கொலைவெறி தாக்குதல் நடத்தினார். அமைதியாக போராடி வந்த மக்கள், அதற்கு பதிலடி கொடுத்தனர். மகிந்தா ஆதரவாளர்களை ஓட ஓட விரட்டி அடித்தனர். உயிருக்கு பயந்து கூலிப்படையினர் ஆற்றில் குதித்து தப்பினர். கலவரம் நாடு முழுவதும் பரவியதால், பயங்கர வன்முறை வெடித்தது.

அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே, முன்னாள் நிதி அமைச்சர் சமல் ராஜபக்சேவின் பூர்வீக வீடுகள் மற்றும் ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் எம்பிக்கள், முன்னாள் அமைச்சர்கள், ராஜபக்சே குடும்பத்தின் பினாமிகள் மற்றும் அதிகார வர்க்கத்தின் வீடுகளை பொதுமக்கள் தீயிட்டு கொளுத்தினர். இதனால், உயிருக்கு பயந்து மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் ஹெலிகாப்டரில் தப்பி திருகோணமலை கடற்படை தளத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். மகிந்தாவின் 2வது மகன் யோஷிதா நாட்டை விட்டு ஓடிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மகிந்தாவின் கட்சி தலைவர்கள் மற்றும் மாஜி அமைச்சர்கள், எம்பிக்கள் உயிருக்கு பயந்து ரகசிய இடத்தில் பதுங்கி உள்ளனர். இவர்கள் யாரும் வெளிநாட்டிற்கு தப்பி செல்லாத வகையில் விமான நிலையம் செல்லும் சாலைகள் மற்றும் கடற்படை தளத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும், மகிந்த ராஜபக்சே பதவி விலகினாலும், கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலகக் கோரி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், வன்முறையில் ஈடுபடும் போராட்டக்காரர்களை கண்டதும் சுட ராணுவத்திற்கும், போலீசாருக்கும் சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ராணுவத்தினரும், போலீசாரும் துப்பாக்கிளுடன் சாலைகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  

மகிந்த பதவி விலகி 4 நாட்களாகியும் புதிய பிரதமரை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. அனைத்துக் கட்சி அடங்கிய இடைக்கால அரசு அமைக்க அதிபர் கோத்தபய அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை முக்கிய எதிர்க்கட்சி  தலைவர் சஜித் பிரேமதாசா நிராகரித்தார்.

அவர் கூறுகையில், ‘அதிபருக்கு கட்டுபாடற்ற  அதிகாரம் அளிக்கும் 20வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை திரும்ப பெறுதல்,  நாடாளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் 19வது சட்ட திருத்தத்தை  மீண்டும் அமல்படுத்துவது, அதிபர் ஆட்சி முறையை ஒழிக்கும் நடவடிக்கையுடன்  இடைக்கால அரசை குறைந்தபட்சமாக 18 மாதங்கள் தொடர்ந்து செயல்பட அனுமதித்தல்  உள்ளிட்ட நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே இடைக்கால அரசு அமைப்பது  பற்றி ஆலோசிக்கலாம். உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் ஆதரவை இழந்தவர் கோத்தபய. அவரது தலைமையில் பிரதமராக செயல்பட நாங்கள் தயாராக இல்லை. கோத்தபய பதவி விலகினால் மட்டுமே பிரதமராக பதவியேற்பேன்’ என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருவதால், பொருளாதாரத்தை மீட்டெடுக்க விரைவில் புதிய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்தார். இதையடுத்து, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுடன் அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று முன்தினம் திடீரென ஆலோசனை நடத்தினார்.

பின்னர், நாட்டு மக்களுக்கு உரையாற்றிய கோத்தபய, ‘இலங்கையில் ராஜபக்சேக்கள் இல்லாத இளம் அமைச்சரவையை நியமிப்பேன். இந்த வாரத்திற்குள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கொண்ட புதிய பிரதமரையும், அமைச்சரவையையும் நியமிப்பேன். நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் 19வது திருத்தத்தை மீண்டும் அமல்படுத்துவதற்கு அரசு திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கும்’ என்று அறிவித்தார்.  

மக்களின் போராட்டம் மற்றும் எதிர்க்கட்சிகள் போர்க்கொடிக்கு அடிபணிந்து கோத்தபய தனது அதிகாரத்தை குறைக்க முன்வந்ததால், புதிய அரசு அமையும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், ‘19வது சட்டத் திருத்தை உடனே அமல்படுத்த வேண்டும், கோத்தபயவும் பதவி விலக வேண்டும்’ என்று எதிர்க்கட்சி  தலைவர் சஜித் பிரேமதாசா தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதேபோல், நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனா தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில், ‘கோத்தபய பதவி விலக வேண்டும்’ என்று பெரும்பாலான எம்பிக்கள் தெரிவித்தனர். இதனால், இடைக்கால அரசு அமைவதில் சிக்கல் ஏற்பட்டது.

இருப்பினும், புதிய அரசு அமைப்பது குறித்து ரணில் விக்ரமசிங்கேவுடன், 2 நாட்களாக கோத்தபய ஆலோசனை நடத்தினார். இதில், பிரதமராக பதவியேற்க ரணில் விக்ரமசிங்கே சம்மதம் தெரிவித்தார். இவர்களுக்கு இடையே ஏற்பட்ட சமரச திட்டத்தின் காரணமாக, இலங்கையின் பிரதமராக 6வது முறையாக ரணில் பதவியேற்பது உறுதியானது. இவர் பிரதமராக பதவி ஏற்றாலும், நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்க பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும். இவருக்கு ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய மற்றும் பல கட்சிகளின் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, நேற்று மாலை அதிபர் மாளிகையில் நடந்த விழாவில், கோத்தபய முன்னிலையில் ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்றார். அவருடன் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. புதிய அமைச்சரவை எப்போது பதவியேற்கும் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. கோத்தபயவும், ரணிலும் ஆலோசித்து புதிய அமைச்சரவை பட்டியலை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரணில் பதவியேற்றதால், அப்பதவியை எதிர்பார்த்திருந்த எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாசா ஏமாற்றம் அடைந்துள்ளார். அதே நேரம், கோத்தபய பதவி விலகியே தீர வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், இலங்கையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. பிரதமராக பதவியேற்று உள்ள ரணில் விக்ரமசிங்கேவுக்கு மகிந்தா ராஜபக்சே வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

கோத்தபய மீது 17ம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம்: இலங்கை அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணி கட்சிகள் விலக்கி கொண்டதால், மகிந்த தலைமையில் இருந்த அரசு பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து, பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகயா, 2 நம்பிக்கையில்லா தீர்மானங்களை கடந்த 2ம் தேதி இரவு நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாபா அபயவர்த்தனாவை அவரது வீட்டில் சந்தித்து வழங்கியது. ஒரு மசோதா அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராகவும், மற்றொன்று மகிந்தா ராஜபக்சே அரசுக்கு எதிரானதாகும்.

அதேபோல், முக்கிய தமிழர் கட்சியான டிஎன்ஏ,வும். முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியும் (யுஎன்பி) அதிபர் கோத்தபயவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை அளித்துள்ளன. இந்த தீர்மானம் மீது அனைத்துக்கட்சி தலைவர்கள் விவாதம் நடத்தி, எப்போது எடுத்து கொள்ளலாம் என்று முடிவெடுக்க குறைந்தது ஒரு வாரம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால், இந்த வாரம் நம்பிக்கையில்லா தீர்மானம் எடுத்து கொள்ளப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.   

இதற்கிடையே ஏற்பட்ட கலவரத்தால் மகிந்த தலைமையிலான அரசு ராஜினாமா செய்துள்ளதால், அவர்கள் மீது அளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் செல்லாதவையானது. இதனால் கோத்தபய மீது அளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் சபாநாயகர் தலைமையில் நேற்று நடந்தது. இதில், வரும் 17ம் தேதி அதிபர் கோத்தபய மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடந்த முடிவெடுக்கப்பட்டது. இந்த தீர்மானத்தில் அதிபர் கோத்தபய தோற்றால் அவரே பதவி விலக வேண்டும். இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின்படி அதிபரை வெளியேற்ற முடியாது. அவர் மீது தொடர் கண்டன தீர்மானங்கள் கொண்டு வந்தபிறகே வெளியேற்ற முடியும். இதனால், நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கோத்தபய தோற்றால் வெளியேறுவாரா என்பது மில்லியன் டாலர் கேள்விதான்.

ரணில் வரலாறு: ரணில் விக்ரமசிங் நாட்டின் பிரதமராக 6வது முறையாக பதவியேற்றுள்ளார். இவர், 1993 முதல் 1994 வரை, 2001 முதல் 2004 வரை, 2015 முதல் 2015 (100 நாட்கள்), 2015 முதல் 2018 மற்றும் 2018 முதல் 2019 வரை இலங்கையின் பிரதமராக பணியாற்றி உள்ளார். ரணில் விக்கிரமசிங்கே 1994ம் ஆண்டு முதல் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக உள்ளார். 1994 முதல் 2001 வரையிலும், 2004 முதல் 2015 வரை எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

கலவரத்தில் கைதிகள் விசாரணை தொடக்கம்: கொழும்புவில் அரசுக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் பலியாகி உள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மக்கள் மீது தாக்குதல் நடத்த  வடரேகா திறந்தவெளி சிறைச்சாலை முகாமைச் சேர்ந்த கைதிகள் பயன்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக, இலங்கை சிறை அதிகாரிகளால் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

கடைசியில் 4 நிபந்தனைகள் எதிர்க்கட்சியில் பிளவு: நேற்று மாலை ரணில் பதவி ஏற்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக கூட, தான் பிரதமராக பதவியேற்க வேண்டும் என்றால் 4 நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என அதிபர் கோத்தபயவுக்கு சஜித் பிரேமதாசா கடிதம் எழுதியிருந்தார். அதில் கூறியிருப்பதாவது:

* ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் அதிபர் கோத்தபய பதவி விலக வேண்டும்.

* அரசாங்கத்தின் அன்றாட நடவடிக்கைகளில் கோத்தபய தலையிடக் கூடாது.

* இடைக்கால அரசாங்கத்திற்கான அமைச்சரவையை அவரது விருப்பத்திற்கேற்ப நியமிக்கக் கூடாது.

* அதிபரின் அதிகாரத்தை நீக்க வேண்டும்.

- இந்த 4 நிபந்தனைகளை ஏற்றால் பிரதமராக பதவி ஏற்க தயார் என்று பிரேமதாசா தெரிவித்திருந்தார். ஆனால், கோத்தபயா இதை நிராகரித்ததால் ரணில் பதவியேற்றார். சஜித்தின் இந்த முடிவு காரணமாக, அவருடைய கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் முன்னணி தலைவர் ஹரின் பெர்னாண்டோ கூறுகையில், ‘பிரதமராக பதவியேற்க கட்சியின் தலைவர் பிரேமதாசா விரும்பவில்லை. இது நிபந்தனைகளை விதித்து நமது பொறுப்பை தட்டிக்கழிக்கும் நேரம் அல்ல, அரசாங்கம் இல்லாமல் கடந்து செல்லும் ஒவ்வொரு நிமிடமும் பேரழிவை ஏற்படுத்தும்,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: