×

எல்ஐசி பங்குகளை விற்க தடையில்லை: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி: எல்ஐசி. பங்கு விற்பனை, பங்கு ஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. கடந்த ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, எல்ஐசி.யின் 3.5 சதவீத பங்குகளை விற்கும் நடைமுறை கடந்த 4ம் தேதி தொடங்கியது. இதன்மூலம், ஒன்றிய அரசு ரூ.21 ஆயிரம் கோடி நிதி திரட்டுகிறது. மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இது பட்டியில் இடப்பட்டதும், பல ஆயிரம் பேர் பங்குகளை வாங்க போட்டி போட்டனர். விண்ணப்பதாரர்களுக்கு பங்கு ஒதுக்கீடு செய்யும் பணி நேற்றுடன் முடியும் என என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இந்த பங்கு விற்பனையை எதிர்த்து பாலிசிதாரர்கள் சிலர் உச்ச நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தனர். அதேபோல், எல்ஐசி பங்குகளை விற்பனை செய்வதற்காக எல்ஐசி.யின் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு  நிதிச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது ஒன்றிய அரசு. இதை எதிர்த்து எல்ஐசி பாலிசிதாரர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்த வழக்குகள் நீதிபதிகள் சந்திரசூட், சூர்யகாந்த் மற்றும் பி.எஸ்.நரசிம்மா அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: எல்ஐசி பங்கு விற்பனைக்கு தடை விதிக்க முடியாது, பங்குகளை ஒதுக்கீடு செய்வதற்கு தடை விதிக்கவோ அல்லது அதில் தலையிடவோ முடியாது. அதே நேரம், 2021ம் ஆண்டைய நிதிச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்று நோட்டீஸ் அனுப்ப  உத்தரவிடுகிறோம். நிதி மசோதாவாக, 2021 நிதிச்சட்டம் தாக்கல் செய்யப்பட்டு, எல்ஐசி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது கேள்விக்கு உள்ளாகிறது. இதற்கு மறுபரிசீலனை அவசியம்.

2017ம் ஆண்டு நிதிச் சட்டமும் இதுபோன்று நிதி மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டது தொடர்பான மனுவும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த மனுவையும் முந்தைய மனுவுடன் சேர்த்து கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும். எல்ஐசி பங்குகளில் ஏராளமான முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த விற்பனையில் நீதிமன்றம் தலையிடுவதும், பங்குகள் ஒதுக்கீட்டுக்கு தடை விதிப்பதும் முறையாகாது. அதனால், மனுதாரருக்கு இடைக்கால நிவாரணம் வழங்க இயலாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags : Supreme Court , No ban on sale of LIC shares: Supreme Court notice
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...