அரூருக்கு பால் ஏற்றசென்ற லாரி டிரைவர் திடீர் மாயம்: நண்பர்களுடன் மதுஅருந்தி மட்டையானது அம்பலம்

ஊத்தங்கரை :கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சிப்பம்பட்டி அருகேயுள்ள ஒன்கரை காட்டுப்பகுதியில் ஊத்தங்கரை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு லாரி கேட்பாரற்று நின்று கொண்டிருந்தது. அதில் எழுதப்பட்டிருந்த லாரியின் உரிமையாளரான கெங்கவேரம்பட்டி சுப்புராயன் நகரை சேர்ந்த வாசு(32) என்பவரின் செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு போலீசார் பேசினர். அப்போது, ஊத்தங்கரை அடுத்த செங்கன்கொட்டாவூரை சேர்ந்த லாரி டிரைவரான அன்பழகன்(25) என்பவரை அரூர் அருகே தேவராஜ்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு சென்று  பால் லோடு ஏற்றி வரும்படி கூறி வாசு அனுப்பியிருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அன்பழகனின் செல்போன் நம்பரை வாசுவிடம் இருந்து வாங்கிய போலீசார் அதற்கு தொடர்பு கொண்டபோது அவர் போனை எடுக்கவில்லை.

லாரியை நிறுத்திவிட்டு மாயமான அன்பழகனை போலீசார் தேடினர். அப்போது, அந்தபகுதியில் கோயில் திருவிழா நடந்து வருவதும், இதற்காக லாரியை நிறுத்திவிட்டு நண்பர்களுடன் திருவிழாவுக்கு சென்ற அன்பழகன் அங்கேயே மதுஅருந்திவிட்டு போதையில் மட்டையாதும் தெரியவந்தது. பின்னர் அப்பகுதியில் இருந்த அன்பழகனை போலீசார் காவல்நிலையம் அழைத்து வந்தனர். மேலும் லாரியையும் மீட்டு காவல்நிலையம் எடுத்து வந்தனர். தொடர்ந்து வாசுவை காவல்நிலையம் வரவழைத்து அவரிடம் லாரி ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அன்பழகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: