கோவை அருகே மர்ம விலங்கு கடித்து 4 ஆடுகள் பலி

அன்னூர்: கோவை அருகே மர்ம விலங்கு கடித்ததில் 4 ஆடுகள் பலியாகின. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கோவை மாவட்டம், அன்னூர் அருகே ஒட்டர்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் சச்சின், நூர் முகம்மது பிரதோஷ். இவர்கள் பழக்கடை நடத்தி வருகின்றனர். அத்துடன் ஆடு வளர்ப்பு தொழிலும் செய்து வருகின்றனர். இவர்கள் அன்னூர் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஜீவா நகர் பகுதியில் ஆட்டு பட்டி அமைத்து அதில் இரண்டு பெரிய ஆடுகள், இரண்டு குட்டிகளை வளர்த்து வந்தனர். இன்று அதிகாலை அப்பகுதிக்கு சென்ற பொதுமக்கள் ஆடுகள் உடல் சிதறிய நிலையில் இறந்து கிடப்பதை பார்த்து உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் அவர்கள் வந்து பார்த்த போது கட்டிய நிலையில் இரண்டு ஆடுகள் கடித்து குதறி, குடல் வெளியே தள்ளப்பட்ட நிலையில் இறந்து கிடந்தன. இரண்டு குட்டி ஆடுகளின் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டு வெளியே வீசி கிடந்தன.

ஒரு ஆட்டின் சதைப்பகுதி அனைத்தும் தின்ற நிலையில் கிடந்தது. மேலும் ஆடுகள் பலியான இடத்தில் சிறுத்தையின் கால் தடம் போல் இருந்தது. இதை பார்த்த உரிமையாளர்களும் அப்பகுதி மக்களும் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனத்துறை மற்றும் அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் பார்வையிட்டு விசாரித்தனர்.  சில மாதங்களுக்கு முன்பு அன்னூரை ஒட்டியுள்ள ஆம்போதி,  குமாரபாளையம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததாக வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். தற்போது மீண்டும் மர்ம விலங்கு அன்னூர் அருகே ஊருக்குள் புகுந்து ஆடுகளை கடித்து கொன்றது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வனத்துறையினர் ஆய்வு செய்து மர்ம விலங்கை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: