கேரளாவிற்கு அரசு பஸ்சில் கடத்திய ரூ.56 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது

பாலக்காடு: தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு பஸ்சில் கடத்திய 56 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கேரள மாநிலம் பாலக்காடு இன்ஸ்பெக்டர் னிவாசன் தலைமையில் கலால்துறை அதிகாரிகள் நேற்று பிபிஎல் சந்திப்பு சாலை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பொள்ளாச்சியில் இருந்து கோபாலபுரம் வழியாக பாலக்காடு நோக்கி வந்த தமிழ்நாடு அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். பஸ்சில் சந்தேகப்படும்படி ஒருவர் அமர்ந்திருந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்.

இதனையடுத்து அவர் வைத்திருந்த பேக்கை சோதனை செய்தனர். அதில் 500 ரூபாய் நோட்டுக்கள் கட்டுக்கட்டாக ரூ. 56 லட்சம் பணம் இருந்தது. இது குறித்து ஆவணங்கள் கேட்டபோது அவரிடம் எந்த ஆவணமும் இல்லை. எனவே இது ஹவாலா பணம் என்பது தெரியவந்தது. விசாரணையில் அவரது பெயர் மீர் அப்துல்காதர்(40) என்பது தெரியவந்தது. அவரை கலால் துறை அதிகாரிகள் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்து பாலக்காடு தெற்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: