×

ஆரணி அருகே ஆதனூர் ஊராட்சி பெரிய ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்: மர்மநபர்கள் விஷம் கலப்பா?

ஆரணி: ஆரணிஅருகே ஆதனூர் ஊராட்சியில் உள்ள பெரிய ஏரியில் மீன்கள் செத்து மிதந்தது. இதில், மர்மநபர்கள் விஷம் கலந்துள்ளார்களா என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொள்ள கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆதனூர் ஊராட்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 200 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி உள்ளது. கடந்தாண்டு பெய்த கனமழையால் நீர்வரத்து அதிகரித்து ஏரி நிரம்பி கோடிபோனது. பொதுமக்கள் தங்களுடைய தேவைக்கும், கால்நடைகளுக்கும் தண்ணீர் பயன்படுத்தி வந்தனர். ஏரி நிரம்பியதால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீன் வளர்க்க ஏரி ஏலம் விடப்பட்டது.

இதையடுத்து, ஏலம் எடுத்த நபர்கள் ஏரியில் கெண்டை, ஜிலேபி, நாட்டு விறால் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன் குஞ்சுகளை வளர்த்து வந்தனர்.இந்நிலையில், ஏரியில் திடீரென நேற்று ஆயிரக்கணக்கான மீன்கள் மர்மமான முறையில் செத்து மிதந்தை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால், துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், வாகனஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மீன்கள் செத்து  மிதப்பதால் மர்மநபர்கள் யாரேனும்  தண்ணீரில் விஷம்  கலந்தார்களா?  என்று பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.எனவே, ஆதனூர் பெரிய  ஏரியில் மர்மமான முறையில் இறந்து கிடக்கும் மீன்களை அகற்றி தண்ணீரில் விஷம் கலந்துள்ளதா? என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : adhanur ,arani , Fish floating dead in Adanur panchayat big lake near Arani: Mysterious people mix poison?
× RELATED ஜேசிபி, டிப்பர் லாரிகளை சிறைபிடித்த...