மேய்ச்சலுக்கு கேரளா சென்று திரும்பியபோது பரிதாபம் செம்மறி ஆட்டுக்கூட்டத்தில் லாரி புகுந்து 50 ஆடுகள் உடல் நசுங்கி பலி: 3 உரிமையாளர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்

மதுக்கரை:  கோவை சூலூரை சேர்ந்தவர்கள் நாகராஜ் (38), ஆறுமுகம் (48), முத்து (55). இவர்கள் 3 பேரும் செம்மறி ஆடு வளர்ப்பு தொழில் செய்து வருகிறார்கள். 400க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வரும் இவர்கள் மேய்ச்சலுக்காக ஆடுகளை தமிழகத்தின் பிறப்பகுதி மற்றும் கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு ஓட்டிச்செல்வார்கள். அங்கு பட்டி அமைத்து பசும்புற்கள் கிடைக்கும் வரை மேய்ச்சலுக்கு விடுவார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் போதிய மேய்ச்சல் நிலம் இல்லை.இதனால் கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு 3 பேரும் தங்களுக்கு சொந்தமான ஆடுகளை ஓட்டிச்சென்றனர். பகல் நேரங்களில் மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றுவிட்டு, இரவு நேரத்தில் பட்டி அமைத்து அதில் அடைத்து வைத்து அங்கேயே தங்கினர். அக்னிநட்சத்திரம் முடிந்ததும் கேரளாவில் மழை காலம் தொடங்கி விடும். இதனால் ஆடுகளை மேய்க்க முடியாது. இதனையடுத்து நேற்று முன்தினம் ஆடுகளை கோவை சூலூருக்கு சாலை வழியாக ஓட்டி வந்துகொண்டிருந்தனர்.

வேலந்தாவளத்தில் இருந்து ஒத்தக்கால்மண்படம் செல்லும் சாலையில் வழுக்கள் என்ற இடத்தில் நேற்று அதிகாலை 400க்கும் மேற்பட்ட ஆடுகளுடன் 3 பேரும் வந்தனர். அப்போது கோவையில் இருந்து பாலக்காட்டிற்கு கம்பி லோடு ஏற்றிய லாரி வந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி செம்மறி ஆட்டுக்கூட்டத்திற்குள் புகுந்தது. இதில் சக்கரத்தில் சிக்கி 50 லாரிகள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகின. 20க்கும் மேற்பட்ட ஆடுகள் படுகாயம் அடைந்தன. மற்ற ஆடுகள் சிதறி ஓடின.அதிர்ஷ்டவசமாக ஆடு உரிமையாளர்கள் உயிர் தப்பினர். கண் முன்பு ஆடுகள் லாரி சக்கரத்தில் சிக்கி சாலை முழுவதும் சதையும், ரத்ததுமாக பலியாகி கிடப்பதை பார்த்த ஆடு உரிமையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் க.க. சாவடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒத்தப்பாலத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் முகமது ரமி (45) என்பவரை கைது செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.பலியான ஆடுகளின் உடல்கள்  மீட்கப்பட்டு க.க.சாவடி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.  அங்கு கால்நடை டாக்டர் சுதா பிரேத பரிசோதனை செய்தார். அதன்பின்னர் ஆடுகளை  புதைக்க உரிமையாளர்கள் எடுத்துச்சென்றனர்.

Related Stories: