தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான கரும்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியாளர்களுக்கான 52ஆம் ஆண்டு பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்தார் அமைச்சார் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை: இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் - கரும்பு இனப்பெருக்கு நிறுவனம், கோயம்புத்தூர் மற்றும் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை இணைந்து நடத்தும் 52ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான கரும்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சிப் பயிலரங்கினை  வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (12.5.2022) சென்னை, ஆழ்வார்பேட்டையில் தொடங்கி வைத்து விழாப் பேருரை ஆற்றினார்கள்.  குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்  சிறப்புரை ஆற்றினார்கள்.

முன்னதாக, மதுராந்தகம் கூட்டுறவு  சர்க்கரை ஆலையால் அமைக்கப்பட்ட கரும்பு ரகங்கள், இயந்திரங்கள் மற்றும் நுண்ணுயிர் பாசன அமைப்புகள், திசு வளர்ப்பு நாற்றுகள், உயிர் உரங்கள் உள்ளடக்கிய கண்காட்சியினை வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்கள். மேலும், இவ்விழாவில் வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் பயிலரங்க ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டு, அதிக சராசரி மகசூல் பெற்ற விவசாயிகள் மற்றும் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்கள்.

வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் தனது விழாப் பேருரையில், நானும் ஒரு கரும்பு விவசாயிதான் என்று தொடங்கி, உயர் விளைச்சல் மற்றும் உயர் சர்க்கரை சத்து, கரும்பு ரகங்கள் சாகுபடியை கரும்பு விவசாயிகள் மத்தியில் ஊக்குவிக்க வேண்டும் என்றும், உபபொருட்களைக் கொண்டு இணைமின் உற்பத்தி, எத்தனால் உற்பத்தி ஏற்படுத்தி ஆலையை இலாபகரமாக இயக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்கள். மேலும் அமைச்சர்  பயிலரங்கிற்கு வருகை புரிந்த கரும்பு விவசாயிகளுடன் கலந்துரையாடினார்கள்.

இந்நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்தனது சிறப்புரையில், ஒன்பது வருடங்களாக இயக்கப்படாமல் இருந்த மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் தமிழ்நாடு முதலமைச்சரால் 2010-2011ஆம் ஆண்டு அரைவை பருவத்தில் தொடங்கி வைக்கப்பட்டது என்றும், தமிழ்நாடு அரசு, விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்து நடைமுறைப்படுத்தி வருகிறது என்றும், அந்த வகையில் கரும்பு விவசாயிகளுக்கு பொங்கல் பரிசாக சிறப்பு ஊக்கத் தொகை வழங்கி சிறப்பித்துள்ளது எனவும் தெரிவித்தார்கள்.

இவ்விழாவில், உத்தரமேருர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் சர்க்கரைத் துறை ஆணையர்  ஹர்மந்தர் சிங்,  சர்க்கரைத் துறை கூடுதல் ஆணையர் க.அன்பழகன், இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம்-கோயம்புத்தூர் கரும்பு இனப்பெருக்கு நிறுவன இயக்குநர் முனைவர்ஹேமபிரபா, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக ஆராய்ச்சி இயக்குநர் முனைவர் சுப்பிரமணியம், மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குநர் தே.ஜவகர் பிரசாத் ராஜ், மற்றும் வேளாண்மைத் துறை சார்ந்த உயர் அலுவலர்கள், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் மேலாண்மை இயக்குநர்கள், தலைமை நிர்வாகிகள் மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளின் உயர் அலுவலர்கள், கரும்பு ஆராய்ச்சி வல்லுனர்கள், கரும்பு பெருக்கு அலுவலர்கள், கரும்பு அலுவலர்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: