மாமல்லபுரம் அருகே 3 கற்சிலைகள் திருடிய திருநங்கை கைது

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே இன்று அதிகாலை ₹1 லட்சம் மதிப்புள்ள 3 கற்சிலைகள் திருடிய திருநங்கையை போலீசார் கைது செய்தனர். அவரது கூட்டாளி தப்பி ஓடிவிட்டார். மாமல்லபுரம் அருகே தேவனேரி பகுதியை சேர்ந்தவர் ருக்மாங்கதன். இவர், இசிஆர் சாலையில், தனது வீட்டை ஒட்டி சிற்பக் கலைக்கூடம் நடத்தி வருகிறார். இந்நிலையில், இன்று அதிகாலை 3.30 மணிக்கு நாய் குரைக்கும் சத்தம் கேட்டு ருக்மாங்கதன் எழுந்து வெளியே வந்து பார்த்தார். அப்போது தனது சிற்பக் கலைக்கூடத்தில் இருந்து 2 பேர் பைக்கில் சிலைகள் திருடி செல்வதை கண்டறிந்து அலறி சத்தம் போட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்ததும் மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், எஸ்ஐ விஜயகுமார் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு போலீசாரை பார்த்ததும் பைக் மற்றும் சிலைகளை போட்டுவிட்டு 2 மர்ம நபர்களும் தப்பியோட முயற்சித்தனர். அவர்களில் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரது கூட்டாளி தப்பி ஓடிவிட்டார்.

பிடிபட்ட மர்ம நபரை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், அவர் பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முருகனின் மகள் சந்திரலேகா (21), திருநங்கை என்பதும், இவரது நண்பர் புகழ் என்பவருடன் சேர்ந்து சிலைகளை திருட முயற்சித்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ₹1 லட்சம் மதிப்புள்ள 3 அடி உயரமுள்ள அம்மன் சிலை, 1 அடி உயர மதுரை வீரன் சிலை, 1 அடி உயர யோக ஐயக்கிரீவரர் சிலை மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். இப்புகாரின்பேரில் மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிலைகள் திருடிய திருநங்கை சந்திரலேகாவை கைது செய்தனர். தலைமறைவான அவரது கூட்டாளி புகழ் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Related Stories: