×

மக்கள் போராட்டத்துக்கு அடிபணிந்தார் இலங்கை அதிபர் நாடாளுமன்றத்துக்கு முழு அதிகாரம்

* கோத்தபய அதிரடி அறிவிப்பு
* சமரசத்தை ஏற்க மக்கள் மறுப்பு
* பிரதமராகிறார் ரணில் விக்கிரமசிங்க?

கொழும்பு: மக்கள் போராட்டத்துக்கு பணிந்து, இலங்கை நாடாளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படும் என்று கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார். புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கை நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் அதிபரின் அறிவிப்பை மக்கள் ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து, ஆளும் ராஜபக்சே அரசுக்கு எதிராக பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் குதித்துள்ளனர்.

பல தரப்பிலும் நெருக்கடிகள் வலுத்ததால், கடந்த 9ம் தேதி பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்தார். அவரது ஆதரவாளர்கள் சுமார் 3000க்கும் மேற்பட்டோர், பிரதமர் இல்லம் அருகே, போராட்டம் நடத்திய மக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர். கொதித்தெழுந்த பொதுமக்கள், மகிந்தா ஆதரவாளர்களை ஓட ஓட விரட்டி அடித்தனர். இதனால் பெரும் கலவரம் வெடித்தது. அரசுக்கு எதிராக ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த பொதுமக்கள், இந்த தாக்குதல் சம்பவத்தால் மேலும் கோபமடைந்து ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் எம்பிக்கள், முன்னாள் அமைச்சர்கள், ராஜபக்சே குடும்பத்தின் பினாமிகளின் வீடுகளை தீயிட்டு கொளுத்தினர்.

அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே, முன்னாள் நிதி அமைச்சர் சமல் ராஜபக்சேவின் பூர்வீக வீடுகளும் எரிக்கப்பட்டன. பிரதமர் வீட்டுக்குள் போராட்டக்காரர்கள் நுழைய முயன்ற நிலையில் ராணுவம் தடுத்தது. இந்த வன்முறையில் ஆளுங்கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனாவின் எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரளா, அவரது பாதுகாவலர் உள்பட 10 பேர் பலியாகினர். பலர் காயமடைந்துள்ளனர். 217 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், கலவரத்தில் ஈடுபடுவோரையும், பொதுச்சொத்துகளை சேதப்படுத்துவோரையும் சுட்டுத்தள்ள உத்தரவிட்டு முப்படைகளுக்கு இலங்கை அரசு அதிகாரம் அளித்துள்ளது. இந்த அசாதாரண சூழலில், பொது மக்களிடம் சிக்கினால் உயிருக்கே ஆபத்தாகி விடும் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது கட்சி தலைவர்கள் பயந்து பதுங்கியுள்ளனர். மகிந்த ராஜபக்சே குடும்பத்தினர் திருகோணமலை கடற்படை தளத்தில் பதுங்கி உள்ளார்.  ஆளும்கட்சியின் மற்ற பிற தலைவர்களும் உயிருக்கு பயந்து வெவ்வேறு இடங்களில் பதுங்கி உள்ளனர்.

இந்நிலையில், இலங்கையின் மத்திய வங்கியின் கவர்னர் பி.நந்தலால் வீரசிங்கே நிருபர்களிடம் கூறும்போது, ‘இலங்கையில் 2 நாளில் புதிய அரசு அமையாவிட்டால் பொருளாதாரம் சீர்குலைந்து விடும். அடுத்த 2 வாரங்களில் அரசியல் கட்சிகள் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தாவிட்டால் மத்திய வங்கியின் கவர்னர் பதவியில் இருந்து விலகுவேன்’ என்றார். இலங்கையில் நிலவி வரும் பதற்ற நிலையை தணிக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வு அளித்து இலங்கை அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தளர்வு அளிக்கப்படும் என்றும் பிற்பகல் 2 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. இலங்கையில் அமைதி நிலவ வேண்டும் என போப் பிரான்சிஸ் கேட்டு கொண்டுள்ளார். எனினும், ராஜபக்சே அரசுக்கு எதிராக கொழும்புவில் உள்ள அந்நாட்டு நாடாளுமன்றத்தின் அருகே போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கோரி, அதற்கான பேனர்களை கைகளில் ஏந்தியபடி போராட்டம் நடத்தினர். விதிகளை மீறி செயல்பட்டதற்காக அவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.

தொடர்ந்து இலங்கை அரசுக்கு எதிராக மக்களிடம் இருந்து கோஷங்கள் எதிரொலித்து வரும் நிலையில், எண்ணற்ற தலைவர்களின் வீடுகள் மீது அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தும் சூழலில், கோத்தபய ராஜபக்சே கூறுகையில், ‘இலங்கையில் ராஜபக்சேக்கள் இல்லாத இளம் அமைச்சரவையை நியமிப்பேன். இந்த வாரத்தில் ஒரு புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும். நாடாளுமன்றத்திற்கு மேலும் அதிகாரம் அளிக்கும் வகையில் 19 வது திருத்தத்தின் உள்ளடக்கங்களை மீண்டும் அமல்படுத்துவதற்கு அரசியலமைப்பில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

இதற்கிடையில், இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகியதைத் தொடர்ந்து, புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளில் அதிபர் கோத்தபய தீவிரம் காட்டி வருகிறார். புதிய அரசு அமைப்பது தொடர்பாக பல்வேறு கட்சிகளின் தலைவர்களை அவர் அழைத்து பேசி வருகிறார். அந்த வகையில் தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை, பிரதமர் பதவியை ஏற்க வருமாறு பலமுறை அழைப்பு விடுத்தும் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்து அவர் அதனை தவிர்த்தார்.

இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், இலங்கை முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, அதிபர் கோத்தபயவை சந்தித்து பேசியுள்ளார். பிரதமர் நியமனம் தொடர்பாக இருவரும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க விரைவில் பதவியேற்கக்கூடும் என இலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.க்கள் பெரும்பாலானோர் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு அளிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் ராஜபக்சேக்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் மனப்பான்மையில் சற்று மாற்றம் ஏற்படும். அதனுடன் இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் மக்கள் போராட்டத்துக்கு கோத்தபய பணிந்தாலும், பொதுமக்கள் போராட்டத்தை கைவிடவில்லை. தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Tags : President ,Sri ,Lanka ,Parliament , To the people's struggle, he surrendered, the President of Sri Lanka
× RELATED இலங்கைக்கு கடத்தப்பட்ட பீடி இலைகள் படகுடன் பறிமுதல்