×

மயிலாடுதுறையில் பட்டினபிரவேச நிகழ்ச்சி கொடியேற்றத்துடன் துவக்கம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் ஞானபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி பெருவிழா, குருபூஜை பெருவிழா, பட்டின பிரவேச பல்லக்கு நிகழ்ச்சி 11 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்தாண்டு வரும் 22ம் தேதி பட்டின பிரவேச பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறும் என்று தருமபுரம் ஆதீனம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கு திக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மனிதனை மனிதன் சுமப்பது மனித உரிமை மீறல் என்றனர்.

இதனால் பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதைதொடர்ந்து பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டுமென பாஜ உள்ளிட்ட இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. இதனால் பட்டின பிரவேச நிகழ்ச்சி நடக்குமா, நடக்காதா என்ற நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இந்தாண்டு பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி ஆர்டிஓ உத்தரவு வழங்கினார்.

இதைத்தொடர்ந்து ஞானபுரீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா, குருபூஜை பெருவிழா, பட்டின பிரவேச பல்லக்கு நிகழ்ச்சிக்கான கொடியேற்றம் இன்று காலை 9 மணிக்கு நடந்தது. முன்னதாக கொடிமரத்துக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் ரிஷப கொடி ஏற்றப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். விழாவின் முக்கிய நிகழ்வாக 18ம் தேதி திருக்கல்யாண வைபவம், 20ம் தேதி தேரோட்டம், 21ம் தேதி காவிரியில் தீர்த்தவாரி நடக்கிறது. வரும் 22ம் தேதி தருமபுரம் ஆதீனம் 27வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமி, சிவிகை பல்லக்கில் பட்டின பிரவேசம் மேற்கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார்.

Tags : Mayiladuthurai , Mayiladuthurai, starvation, with flag hoisting, start
× RELATED மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில்...