சேனை ஓடை பாலத்தில் சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும் : பொதுமக்கள் கோரிக்கை

கம்பம்: கம்பம்மெட்டு காலனி பகுதியில் உள்ள சேனை ஓடையின் சுற்றுச்சுவர் பாதி இடிந்த நிலையில் உள்ளது. அதனை முழுமையாக கட்டி தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.கம்பம் நகராட்சிக்கு உட்பட்டு 33 வார்டுகள் உள்ளன. இதில் 9வது வார்டு பகுதியான கம்பம்மெட்டு காலனி பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களும் வசிக்கின்றனர். இந்த ரோடு வழியாக 10 கிலோ மீட்டரில் கேரளா சென்றுவிடலாம் என்பதால் இப்பகுதியில் அதிக போக்குவரத்து நிலவி வரும்.

கேரள தோட்ட வேலைக்கு செல்லும் பெண்கள் ஆயிரக்கணக்கான ஜீப்புகளில் இந்த ரோட்டின் வழியாக கேரளா செல்கின்றனர். இதில் பழைய செக்போஸ்ட் அருகே உள்ள சேனை ஓடை சுற்றுச்சுவர் இல்லாமல் பாதி இடிந்த நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் வரும் வாகனங்கள் நிலை தடுமாறி சேனை ஓடைக்குள் கவிழும் அபாயம் உள்ளது. எனவே சேனை ஓடை பால சுற்றுச்சுவரை முழுமையாக கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Related Stories: