கடலூர் அருகே தனியார் கம்பெனியில் திருட்டை தடுக்க முயன்ற போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: மர்ம கும்பல் தப்பி ஓட்டம்

புவனகிரி:  கடலூர் அருகே தனியார் கம்பெனிக்குள் நுழைந்து இரும்பு திருட முயன்ற கும்பல், போலீசார், காவலாளிகள் மீது பெட்ரோல் குண்டு வீசியது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள பெரியகுப்பம் கிராமத்தில் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை உள்ளது. சுமார் 850 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆலை பரந்து விரிந்துள்ளது. இந்த தொழிற்சாலை செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பே இயங்காமல் நின்று விட்டது. அதனால் இந்த ஆலைக்குள் உள்ள இரும்பு பொருட்கள் அவ்வப்போது திருடு போனது.

சுற்று வட்டாரப் பகுதிகள் மற்றும் வெளியூரை சேர்ந்த சிலர் அவ்வப்போது இரவு நேரங்களிலும், பகல் நேரங்களிலும் கம்பெனிகள் நுழைந்து தங்களால் இயன்ற அளவு இரும்பு பொருள்களைத் திருடிச் சென்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை நேரத்தில் மர்ம நபர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் கூட்டமாக கம்பெனிகள் புகுந்து இரும்பு பொருள்களை திருடி உள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த கம்பெனி காவலாளிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து புதுச்சத்திரம் போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் சில காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

 

போலீசாரும், காவலாளிகளும் இரும்பு திருடிய மர்ம நபர்களை தேடி கம்பெனிக்குள் இருந்த அவர்களை பிடிப்பதற்காக புதர் மண்டி இருந்த பகுதிக்குள் தேடிச் சென்றுள்ளனர். அப்போது திடீரென யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அந்த கும்பல் போலீசார் மற்றும் காவலாளிகள் மீது 5 பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதில் 3 பெட்ரோல் குண்டுகள் வெடித்து சிதறியது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவ இடத்தில் ஆய்வு செய்த போலீசார் அங்கு வெடிக்காமல் கிடந்த 2 பெட்ரோல் குண்டுகளை பறிமுதல் செய்தனர்.  புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

Related Stories: