வேலூரில் குடிபோதையில் ரகளை கத்தியை பறித்து கணவனை வெட்டிக்கொன்ற மனைவி

வேலூர்: வேலூரில் குடிபோதையில் வீட்டுக்கு வந்து ரகளையில் ஈடுபட்ட கணவன், கத்தியால் மனைவியை வெட்டினார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி, கத்தியை பறித்து கணவனை வெட்டிக்கொன்றார். வேலூர் வேலப்பாடி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் குமரவேல்(60). இவர் லாரி ஷெட்டில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி கோமதி(48). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார். இளைய மகள் கல்லூரியில் படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு் குமரவேல் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து நீண்ட நேரம் ரகளையில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து நேற்று அதிகாலை 1 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்த கோமதியை குமரவேல் திடீரென தாக்கியுள்ளார். இந்த தகராறில் கணவன்-மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டார்களாம். அப்போது வீட்டில் இருந்த கத்தியால் கோமதியை குமரவேல் வெட்டியுள்ளார். இதில் கோமதிக்கு நெற்றி மற்றும் கையில் வெட்டு விழுந்தது. இதனால் ஆத்திரமடைந்த கோமதி, அந்த கத்தியை பறித்து கணவரை சரமாரியாக வெட்டிக்கொன்றார்.  படுகாயம் அடைந்த கோமதி வேலூர் அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: