முதல் வாய்ப்பிலேயே அசத்திய சாய் கிஷோர்

புனே: குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக களமிறங்கிய தமிழக வீரர் சாய் கிஷோர், தனது முதல் ஐபிஎல் ஆட்டத்திலேயே  அற்புதமாகப் பந்துவீசி அசத்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியை விட மற்ற அணிகளே தமிழக வீரர்களுக்கு களமிறங்கும் வாய்ப்பை அளித்து வருகின்றன. அவர்களும் ஆட்டத்தின் போக்கை மாற்றும் அளவுக்கு திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். அப்படி முருகன் அஷ்வின் (மும்பை), நடராஜன், வாஷிங்டன் சுந்தர் (ஐதராபாத்), தினேஷ் கார்த்திக் (பெங்களூர்),  வருண் சக்கரவர்த்தி (கொல்கத்தா) என பலரைச் சொல்லலாம்.

அதிலும் குஜராத் அணியில் விஜய் சங்கர்,  சாய் சுதர்சன், சாய் கிஷோர் என 3 வீரர்கள் உள்ளனர். அவர்களில்  விஜய் சங்கர், சாய் சுதர்சனுக்கு மாறி, மாறி வாய்புகளை தந்து வந்தார் கேப்டன் ஹர்திக். விஜய் சங்கர் தடுமாறினாலும், சாய் சுதர்சன் அற்புதமாக விளையாடி வருகிறார். இதில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த  ஸ்பின்னர் சாய் கிஷோருக்கு நேற்று முன்தினம் லக்னோ அணிக்கு எதிராகக் களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தது.   அது அவருக்கு முதல் ஐபிஎல் ஆட்டம். ஆல்ரவுண்டர் என்றாலும்  அந்த ஆட்டத்தில் பேட்டிங் செய்யும்  வாய்ப்பு கிடைக்கவில்லை.

லக்னோ இன்னிங்சின் 11வது ஓவரை தனது முதல் ஐபிஎல் ஓவராக சாய் கிஷோர் வீசினார். அந்த ஓவரில் வெறும் 4 ரன்களை கொடுத்ததுடன், முக்கிய விக்கெட்டான  ஆயுஷ் பதோனியை வீழ்த்தினார். அடுத்து 13வது ஓவரை தனது 2வது ஓவராக வீச வந்தார். அதில் 3 ரன்களை மட்டும் கொடுத்து  மோஷின் கான் விக்கெட்டை  கைப்பற்றினார். அடுத்த ஓவரில் எஞ்சிய 2 விக்கெட்களும் வீழ  14வது ஓவரிலேயே குஜராத் வெற்றி பெற்று முதல் அணியாக  பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

கிஷோர்  தனது அறிமுக ஐபிஎல் ஆட்டத்திலேயே  2 ஓவரில் 7 ரன் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். அறிமுக ஆட்டத்தில், முதல் ஓவரிலேயே விக்கெட் வீழத்திய வீரர்களின் பட்டியலில்  சாய் கிஷோரும் இணைந்துள்ளார். அதுமட்டுமல்ல சென்னை அணியில் கடந்த 3 ஆண்டுகளாக இருந்த கிஷோருக்கு, 4வது ஆண்டில் குஜராத் கேப்டன் ஹர்திக் மூலம் வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், சிஎஸ்கே அணியில் இருக்கும் நாராயண் ஜெகதீசன், செழியன் ஹரிநிஷாந்த் ஆகியோர் அறிமுக வாய்ப்புக்காக இன்னும் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.

Related Stories: