×

தேர்த்திருவிழா திருவள்ளூரில் இன்று மின் நிறுத்தம்

திருவள்ளூர்:  திருவள்ளுர் ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் திருக்கோயிலில் இன்று 12ஆம் தேதி தேர் திருவிழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு கோயிலை சுற்றி உள்ள வடக்கு ராஜவீதி, கிழக்கு ராஜவீதி, தேரடி், பஜார் வீதி ஆகிய பகுதிகளில் இன்று காலை 5.30 முதல் 11 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என்று திருவள்ளூர் கோட்ட செயற்பொறியார் கனகராஜ் தெறிவித்துள்ளார்.

ஸ்ரீ நிகேதன் பள்ளி மாணவி சாதனை: திருவள்ளூர்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் சார்பில், இளம் விஞ்ஞானிகள் தேடலுக்கான யுவிகா போட்டி நடத்தப்பட்டது. இதில் இந்திய அளவில் 35 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்திய அளவில் 150 மாணவர்கள் இளம் விஞ்ஞானிகளாக தேர்வு செய்யப்பட்டனர். இதில் திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் நிறை நிலை பள்ளியின் 9ம் வகுப்பு மாணவி பி.நேத்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரின் அளப்பரிய சாதனையை பள்ளியின் தாளாளர் ப.விஷ்ணுசரண், இயக்குனர் பரணிதரன், பள்ளி முதல்வர் ஸ்டெல்லா ஜோசப், துணை முதல்வர் கவிதா கந்தசாமி, தலைமை ஆசிரியர்கள் டாக்டர் ஷாலினி, பத்மாவதி, ஏடிஎல் ஒருங்கிணைப்பாளர் சைலஜா மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்: திருவள்ளூர்: தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப அமல்படுத்த கோரி அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் நுழைவாயில் அருகே கவனயீர்ப்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் கோவர்தனன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, அம்பத்தூர், திருவெற்றியூர், கும்மிடிப்பூண்டி, மாதவரம், திருத்தணி, பள்ளிப்பட்டு ஆகிய தாலுகாக்களில் இயங்கும் நீதிமன்றங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

கடையை உடைத்து கொள்ளை: புழல்: செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஜி.என்.டி  சாலை அருகே கார்த்திக் என்பவர் (43) மளிகை கடை நடத்தி வருகிறார்.  இவர் வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.  இந்நிலையில், நேற்று காலை 5 மணியளவில் கடைக்கு வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டதை  கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே, உள்ளே சென்று பார்த்தபோது கல்லாவில் இருந்த  ₹ 1 லட்சம் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.  அதன்பேரில், செங்குன்றம் குற்றப்பிரிவு ஆய்வாளர்  புவனேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில், திருட்டு சம்பவம் உண்மை என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து,  வழக்குப்பதிவு செய்து ஆங்கிருந்த  சிசிடி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மளிகை கடையில் உள்ள சிசிடிவி கேமராக்களை தலைகீழாக திருப்பி  மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பேக்கரி கடையில் திருட்டு: திருவொற்றியூர்: திருவொற்றியூர் பெரிய மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் திருமால்(30), அதே பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இவரது கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றார். நள்ளிரவில் மர்ம நபர்கள் இவரது கடையின் பூட்டை உடைத்து கடையில் வைத்திருந்த ₹20 ஆயிரம் மற்றும் வியாபாரத்துக்கு வைத்திருந்த ஐஸ்கிரீம், முறுக்கு, சிப்ஸ் மேலும் அங்கு நிறுத்தியிருந்த பைக்கையும் திருடிச்சென்றனர். புகாரின்படி திருவொற்றியூர் போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 


Tags : Tiruvallur , Power cut in Tiruvallur today
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...