மாதவரம் அருகே குடும்ப தகராறில் தந்தையை அடித்து கொன்ற மகன் கைது

திருவொற்றியூர்: மாதவரம் அடுத்த மாத்தூர் எம்எம்டிஏ 2வது பிரதான தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம்(78),  பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது முதல் மகன் சிவகுமார்(49), இவருக்கு திருமணமாகி ஒரு மகன், மகள் உள்ளனர். 2வது மகன் நரேந்திரகுமார்(45), சிங்கப்பூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 3வது மகன் செந்தில்குமார்(38), திருச்சியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 4வது மகன் செல்வகுமார்(35), திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிவகுமாருக்கு அமெரிக்காவில் உள்ள வங்கியில் வேலை கிடைத்தது. இதையடுத்து மனைவி, மகன், மகளை அமெரிக்காவிற்கு அழைத்துச்சென்று அங்கேயே வாழ்ந்து வந்தார். கடந்த ஆண்டு சிவகுமாருக்கு வங்கியில் வேலை இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மனைவி மற்றும் பிள்ளைகளை அங்கேயே விட்டுவிட்டு சிவக்குமார் மட்டும் சென்னைக்கு வந்துவிட்டார். பின்னர் தந்தை சுப்ரமணியம், தம்பி செல்வகுமார் ஆகியோருடன் வசித்து வந்தார்.

செல்வகுமாருக்கு திருமணம் செய்ய வரன் பார்த்தனர். ஆனால் அவருக்கு பெண் சரியாக அமையவில்லை. மூத்த மகன் சிவகுமார் வீட்டிலேயே இருப்பதால் தான் பெண் கொடுக்க தயங்குகிறார்கள் என பாலசுப்பிரமணியம், சிவகுமாரிடம் கடந்த 9.3.22 தேதி  தகராறில் ஈடுபட்டார்.இதனால் ஆத்திரத்தில் சிவகுமார், பாலசுப்பிரமணியத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பாலசுப்ரமணியம் உயிரிழந்தார்.

புகாரின்படி பால்பண்ணை போலீசார் சிவகுமார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: