×

கோயில்கள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்யாமல் மெட்ரோ ரயில் 4ம் கட்ட பணியை மேற்கொள்ள தடை கோரி வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை

சென்னை: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறையை முடிக்காமல் சென்னை மெட்ரோ ரயிலின் நான்காம் வழித்தடம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த கவுதமன், ரமணன், விஜய்  நாராயணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை நான்காம் வழித்தடம் அமைப்பது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், வடபழனி முருகன் கோயில், வடபழனி வெங்கீஸ்வரர் கோயில், வடபழனி அழகர் பெருமாள் கோயில், விருகம்பாக்கம் சுந்தரவரதராஜ பெருமாள் கோயில், வளசரவாக்கம் வேல்வீஸ்வரர் கோயில், பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோயில் மற்றும் கோயில் குளம், புராதன கோயில் கட்டிடங்கள் அமைந்துள்ளன.

மெட்ரோ ரயில் நான்காவது வழித்தடத்தில் உள்ள சாந்தோம் தேவாலயம், ரோசரி தேவாலயம் உள்ளிட்ட மூன்று தேவாலயங்கள் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக்கு பரிசீலிக்கப்பட்ட போதும், நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயில்கள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக்கு பரிசீலிக்கப்படவில்லை. முதல்கட்ட பணிகள் நடந்தபோது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், விக்டோரியா அரங்கம் உள்ளிட்ட புராதன கட்டிடங்கள் பாதிக்காத வகையில் சுரங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

நூறு ஆண்டுகளுக்கு மேலான கோயில்களின் பட்டியலை தயாரித்து, புராதன கட்டிடங்களாக அறிவிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், பட்டியல் தயாரிக்காததால், மெட்ரோ ரயில் 4வது வழித்தடத்தில் உள்ள கோயில்கள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்யப்படவில்லை. பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்படுவதால் தேர் திருவிழா உள்ளிட்ட கோயில் உற்சவங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மெட்ரோ ரயிலுக்காக அரசு மற்றும் தனியார் சொத்துகளை கையகப்படுத்துவதை விடுத்து கோயில் நிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது.

 மெட்ரோ ரயில் நான்காம் வழித்தடத்தால் பாதிக்கப்படும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் உள்பட ஏழு கோயில்களையும் புராதன கட்டிடங்களாக அறிவிக்க வேண்டும். இந்த கோயில்கள் குறித்து சுற்றுச்சூழல் மற்றும் சமூக தாக்க மதிப்பீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் மெட்ரோ ரயில் நான்காம் வழித்தட பணிகளை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.

Tags : iCourt , Case seeking ban on Metro Rail Phase 4 work without assessing environmental impact on temples: Court to hear today
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு