வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் இதுவரை 8000 பேருக்கு வேலை: அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்

சென்னை: வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இதுவரை 8000 பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு குழுமம், தமிழ்நாடு பிரிவு சார்பில் மாநில அளவில் தொழிற்சாலைகளுக்காக நடைபெற்ற 2020ம் ஆண்டு சுகாதார மற்றும் பாதுகாப்பு விருதுகளுக்கான போட்டியில் வெற்றிபெற்ற தொழிலாளர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் கலந்துகொண்டு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டு செயலாளர் கிர்லோஸ் குமார், குழுமத்தின் துணைத் தலைவர் பாஸ்கரன், விருதுகள் வழங்கும் கமிட்டி உறுப்பினர் ரவிச்சந்திரன், செயலாளர் ராஜ்மோகன், தொழிலக பாதுகாப்பு இணை இயக்குநர் கார்த்திகேயன், குழுமத்தின் பொருளாளர் ஜெகநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பின்னர் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் பேசியதாவது:  முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டாசுத்தொழிற்சாலைகளில் தொடரும் விபத்துகள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார்.

மேலும், கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், இதுபோன்ற விபத்துகளை தடுக்க நிர்வாகம் மற்றும் தொழிலாளர்கள் இருவரையும் ஈடுபடுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார். திமுக அரசு ஆட்சிக்கு வந்த 11 மாதங்களில் புதியதாக 11 ஐஐடிகள் மற்றும் இந்த நாட்டிலேயே முதன்முறையாக இந்த தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ரூ.2877 கோடி உதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இளைஞர்களின் திறன் அளவை அதிகரிப்பதில் ஆர்வமாக இருக்கிறது. தற்போது பல்திறமை வாய்ந்த தொழிலாளர் என்ற கருத்தை செயல்படுத்து வருகிறோம். சமீபத்தில் பல வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இதுவரை 8000 பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக அரசு புகழ்பெற்ற நிறுவனங்களிடமிருந்து ரூ.6500 கோடி முதலீட்டை ஈர்த்துள்ளது. இவ்வாறு பேசினார்.

Related Stories: