×

பப்ஜி மதன் ஜாமீன் கோரி மனு போலீஸ் பதில்தர ஒரு வாரம் அவகாசம்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதால் ஜாமீன் கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்துள்ள மனு குறித்து சென்னை காவல்துறை பதிலளிக்க ஒரு வார காலம் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 பப்ஜி மதனுக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் பிரிவினர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வழக்குப்பதிவு செய்தனர். பெண்களை ஆபாசமாக சித்தரித்தல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பப்ஜி மதன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த  வழக்கில் தர்மபுரியில் தலைமறைவாக இருந்த மதனை கடந்த ஆண்டு ஜூன் 18ம் தேதி போலீசார் கைது செய்தனர். புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட மதன் மீது ஏராளமான புகார்கள் வந்ததால், அவரை சைபர் சட்ட குற்றவாளி எனக் கூறி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க  சென்னை மாநகர காவல் ஆணையர் ஜூலை 5ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
 இதையடுத்து, ஜாமீன் கோரி பப்ஜி மதன் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பப்ஜி மதன் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதி நக்கீரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மதன் தரப்பு வழக்கறிஞர் ஜான் சத்தியன் ஆஜராகி, பப்ஜி மதன் மீது பதிவு செய்யப்பட்ட பிரிவுகளின் படி அவருக்கு 3 மாதம்தான் தண்டனை வழங்க முடியும். ஆனால் அவர் ஒன்பதரை மாதங்களாக சிறையில் உள்ளார்.  மதன் மீது பதிவான பிரிவுகள் பெரும்பாலும் பொருத்தமற்றவை. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென்று வாதிட்டார். அப்போது, மதனின் மனு குறித்து பதலளிக்க காவல்துறை தரப்பில் கூடுதல் அவகாசம் வழங்குமாறு கோரப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஒரு வாரம் அவகாசம் வழங்கி வழக்கை தள்ளிவைத்தார்.

Tags : Babji Madan ,ICC , Babji Madan granted bail Police have one week to respond: ICC order
× RELATED ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த...