×

சென்னையில் நிரந்தர வெள்ள தடுப்பு பணிக்கு மதிப்பீடு தயார் நீர்வழித்தடங்களை மேம்படுத்த முதற்கட்டமாக ரூ.250 கோடி: நீர்வளத்துறை உயர்அதிகாரி தகவல்

சென்னை: நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.1297 கோடிக்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக நீர்வழித்தடங்களை மேம்படுத்துவதற்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 கடந்த 2015ம் ஆண்டு பெய்த கனமழை காரணமாக அடையாற்றில் ஏற்பட்ட வெள்ள நீர் கரைபுரண்டு ஓடிய நிலையில் கரைகள் கடுமையாக சேதமடைந்தது. இரண்டு கட்டமாக நீண்டகால வெள்ளத்தடுப்பு பணிகள் திட்டத்தின் கீழ் இப்பகுதிகளில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், கடந்த 2021ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் அப்பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் அதிக அளவில் இல்லாமல் குறைந்த அளவிலே ஏற்பட்டன.

வடகிழக்கு பருவமழை காலங்களில் வெள்ள பாதிப்புகளிலிருந்து முழுமையாக பாதுகாக்க 18 நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளை செயலாக்க மதிப்பீடுகள் ரூ.1297.49 கோடிக்கு திட்டமிடப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளன. தற்போது, முன்னுரிமை மற்றும் நிதித்தேவையை கருத்தில் கொண்டு, காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்களில் வரதராஜபுரம், பழைய பெருங்களத்தூர், முடிச்சூர், பள்ளிக்கரணை, ராயப்பா நகர், நந்திவரம்-கூடுவாஞ்சேரி, மணலி, வெள்ளிவாயல், கொளத்தூர் மற்றும் மாதவரம் ஆகிய பகுதிகளில் பருவமழை காலங்களில் வெள்ளப்பாதிப்பு ஏற்படாமல் தடுக்க அடையாறு மற்றும் கொசஸ்தலையாறுகளை அகலப்படுத்துதல் போன்ற 8 பணிகளுக்காக ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரூ.70 கோடியில் அடையாற்றில் இருந்து செம்பரம்பாக்கம் உபரிநீர் கால்வாய் முதல் அனகாபுத்தூர் பாலம் வரை அகலப்படுத்தும் பணியும், ரூ.34 கோடியில் போரூர் ஏரி உபரிநீர் கால்வாயை மேம்படுத்துவது, ரூ.9 கோடியில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய சாலையில் சிறு பாலங்கள் அமைப்பது, ரூ.16 கோடியில் குன்றத்தூர் கொளுத்துவான்சேரி தாந்திக்கல் கால்வாய் முதல் போரூர் உபரி நீர் கால்வாய் கட்டுமான பணி, ரூ.39 கோடியில் போரூர் ஏரி முதல் ராமாபுரம் ஏரி வரை கால்வாய் கட்டுமான பணி, ரூ.15 கோடியில் கொசஸ்தலையாறு எடையான்சாவடி மற்றும் சடையாங்குப்பம் கிராமம் அருகே மறு கட்டுமான பணி, ரூ.57 கோடியில் பள்ளிக்கரணை ஏரி முதல் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வரை வடிகால் பணி, ரூ.7.30 கோடியில் கொளத்தூர் ஏரி உபரிநீர் கால்வாயை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நீர்வளத்துறை சார்பில் இப்பணிகளுக்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. இப்பணிகளை வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக அதாவது செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : Chennai ,Resources , Rs 250 crore for first phase improvement of waterways in Chennai
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...