×

இலங்கையில் தொடரும் வன்முறை, தீவைப்பு சம்பவங்கள் உயிருக்கு பயந்து தலைவர்கள் பதுங்கல்: தலைநகர் கொழும்பில் ராணுவம் குவிப்பு

கொழும்பு: இலங்கையில் அரசுக்கு எதிரான பொதுமக்களின் போராட்டம் மேலும் தீவிரமடைந்து உள்ளதால், ஆளும் கட்சி அரசியல் தலைவர்கள் உயிருக்கு பயந்து ரகசிய இடங்களில் பதுங்கி உள்ளனர். வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர தலைநகர் கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் டேங்கிகள் மூலம் ராணுவம் வீரர்கள் ரோந்து செல்கின்றனர். இதனால், இலங்கையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆளும் ராஜபக்சே அரசுக்கு எதிராக பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் குதித்துள்ளனர்.

பல தரப்பிலும் நெருக்கடிகள் வலுத்ததால், கடந்த 9ம் தேதி பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், அவர் பதவி விலகுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக, மகிந்தா ஆதரவாளர்கள் சுமார் 3000க்கும் மேற்பட்டோர், பிரதமர் இல்லம் அருகே போராட்டம் நடத்திய மக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர். கொதித்தெழுந்த பொதுமக்கள், மகிந்தா ஆதரவாளர்களை ஓட ஓட விரட்டி அடித்தனர். இதனால் இலங்கையில் பெரும் கலவரம் வெடித்தது. அரசுக்கு எதிராக ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த பொதுமக்கள், இந்த தாக்குதல் சம்பவத்தால் மேலும் கோபமடைந்து ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் எம்பிக்கள், முன்னாள் அமைச்சர்கள், ராஜபக்சே குடும்பத்தின் பினாமிகளின் வீடுகளை தீயிட்டு கொளுத்தினர்.

அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே, முன்னாள் நிதி அமைச்சர் சமல் ராஜபக்சேவின் பூர்வீக வீடுகளும் எரிக்கப்பட்டன. பிரதமர் வீட்டுக்குள் போராட்டக்காரர்கள் நுழைய முயன்ற நிலையில் அவர்களை ராணுவம் தடுத்தது. இந்த வன்முறையில் ஆளுங்கட்சி எம்பி உட்பட 8 பேர் பலியாகி நாடே போராட்டக்களமாக மாறி உள்ளது. இந்த அசாதாரண சூழலில், பொது மக்களிடம் சிக்கினால் உயிருக்கே ஆபத்தாகி விடும் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது கட்சி தலைவர்கள் பயந்து போய் பதுங்கி உள்ளனர்.

மகிந்த ராஜபக்சே குடும்பத்தினர் திருகோணமலை கடற்படை தளத்தில் பதுங்கி இருப்பதாக கூறப்பட்ட நிலையில் மகிந்த ராஜபக்சே எங்கிருக்கிறார் என்பது ரகசியமாகவே இருந்தது. எந்த அரசியல் தலைவர்களும் வெளிநாடு தப்பி விடாமல் தடுக்க விமான நிலையம் செல்லும் சாலைகளையும் பொதுமக்கள் முற்றுகையிட்டு சோதனைச்சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில், மகிந்த ராஜபக்சே உயிருக்கு பயந்து வெளிநாடு தப்பி விட்டதாக கருதப்பட்ட நிலையில், அவரும் திருகோணமலை கடற்படை தளத்தில் இருப்பதாக இலங்கை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னே நேற்று உறுதி செய்தார்.

அவர் அளித்த பேட்டியில், ‘‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பிரதமர் என்ற முறையில் மகிந்த ராஜபக்சேவுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டியது முப்படையினரின் கடமை. எனவே, அவரின் பாதுகாப்பு கருதி திருகோணமலை கடற்படை தளத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாட்டின் பாதுகாப்பு சூழலில் முன்னேற்றம் ஏற்பட்டதும், மகிந்தா விருப்பப்படி அவர் விரும்பும் இடத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்,’’  என்றார்.

இதனால், மகிந்தா வெளிநாடு தப்பவில்லை என்பது உறுதியாகி உள்ளது. இதேபோல், நாடு முழுவதும் பொதுமக்களின் போராட்டங்கள் நேற்றும் ஓயாத நிலையில், ஆளும்கட்சியின் மற்ற பிற தலைவர்களும் உயிருக்கு பயந்து வெவ்வேறு இடங்களில் பதுங்கி உள்ளனர். குறிப்பாக, முன்னாள் நிதி அமைச்சரும் ராஜபக்சே சகோதரருமான சமல் உள்ளிட்ட தலைவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது ரகசியமாகவே உள்ளது. பொதுமக்கள் தங்களின் வீடுகளை எரித்ததை தட்டிக் கேட்க யாருமில்லாத நிலையில், தமது உயிருக்கு யார் உத்தரவாதம் அளிப்பார்கள் என முன்னாள் அமைச்சர்கள், எம்பிக்கள் கதி கலங்கிப் போயுள்ளனர். இதனால், வெளிநாட்டுக்கும் தப்ப முடியாமல் உள்நாட்டிலேயே அகதிகளைப் போல் அவர்கள் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும் அதனை பொருட்படுத்தாத மக்கள் வீதிகளில் தொடர்ந்து குவிந்துள்ளனர். இதனால் வன்முறை அடங்காததால், ராணுவம் தீவிரமாக களமிறங்கி உள்ளது. வன்முறையில் ஈடுபடும் மக்களை சுட்டுத் தள்ளும்படி ராணுவத்துக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தலைநகர் கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகர சாலைகளில் ராணுவ டேங்கிகள் நிறுத்தப்பட்டுள்ளன. ராணுவ வீரர்கள் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கான ராணுவத்தின் சிறப்பு படைப்பிரிவும் கொழும்பில் குவிக்கப்பட்டுள்ளது. ராணுவ டேங்கிகள் மற்றும் கவச வாகனங்களுடன் தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளப்படுகிறது.

இது குறித்து ராணுவத் தளபதி சவேந்திர சில்வா கூறுகையில், ‘‘பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவே சாலைகளில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் வன்முறையை தவிர்க்க வேண்டும். பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு தீ வைப்பதை தவிர்க்க வேண்டும். ஜனநாயக மற்றும் அமைதியான முறையில் மக்கள் போராட்டம் நடத்த வேண்டும். தற்போதைய அசாதாரண சூழலை பயன்படுத்தி பொதுச் சொத்தை சேதப்படுத்துபவர்கள், திருடுபவர்கள் மீது ராணுவம் நிச்சயம் கடும் நடவடிக்கை எடுக்கும்,’’ என்றார்.

இதே போல், காலி முகத்திடல் அருகே உள்ள அதிபர் தலைமைச் செயலகத்தில் ஒலி பெருக்கி மூலம் ராணுவம் எச்சரிக்கை விடுத்தது. ஊரடங்கு அமலில் உள்ளதால் பொது இடத்தில் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், அங்கிருந்து கலைந்து செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தியது. ஆனால், அதை பொருட்படுத்தாத போராட்டக்காரர்கள் காலி முகத்திடலில் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ள அவர்கள், அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதாகவும் கலைந்து செல்ல முடியாது என்றும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, இன்று முதல் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட உள்ளதாலும், அதனை மீறுவதை மக்கள் தவிர்க்க வேண்டுமெனவும் போலீசார் எச்சரித்துள்ளனர். இது இலங்கையில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

* இந்த வாரத்திற்குள் பிரதமர் நியமனம் - கோத்தபய அறிவிப்பு
பரபரப்பான அரசியல் சூழலில், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்து பேசிய பின் நேற்றிரவு 9 மணிக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது அவர், ‘இந்த வாரத்திற்குள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கொண்ட புதிய பிரதமரையும், அமைச்சரவையையும் நியமிப்பேன்,’ என உறுதி அளித்தார். பிரதமர் பதவிக்கு அனுரகுமார திசாநாயக்கா, எம்.ஏ.சுமந்திரன், சஜித் பிரேமதாசா ஆகியோரின் பெயர்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

* போராட்டக்காரர்களை சுட போலீசாருக்கும் அனுமதி
இலங்கையில் போராட்டக்காரர்களை சுட்டுத்தள்ள ராணுவத்திற்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், கலவரக்காரர்களை கண்டதும் சுட போலீசுக்கும் நேற்று உத்தரவிடப்பட்டுள்ளது. நாட்டில் வன்முறைகள் அதிகரித்துள்ளதால் அதைக் கட்டுப்படுத்த ராணுவத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதே தவிர, ராணுவ ஆட்சியாக இது மாறாது என்றும் பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

* கோத்தபய பதவி விலகினால் மட்டுமே பொறுப்பேற்பேன்
பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சே விலகிய நிலையில், இடைக்கால அரசை அமைக்க கடந்த 2 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. அதிபர் கோத்தபய ராஜபக்சே, ஆளும் கட்சி அதிருப்தியாளர்களிடமும், முக்கிய எதிர்க்கட்சியான சமகி ஜனா பாலவேகயா (எஸ்ஜேபி) கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஆனால் இதில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அனைத்து கட்சிகளையும் அடங்கிய இடைக்கால கூட்டணி ஆட்சி அமைக்க அதிபர் கோத்தபய விடுத்த அழைப்பை எஸ்ஜேபி கட்சி தலைவரான சஜித் பிரேதாசா ஏற்கனவே நிராகரித்துள்ளார்.

இந்நிலையில், சஜித் பிரேமதாசா நேற்று விடுத்த அறிக்கையில், ‘அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்பதே நாட்டின் பெரும்பான்மையான மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. அக்கோரிக்கையை கோத்தபய நிறைவேற்ற வேண்டும். உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் ஆதரவை இழந்தவர் கோத்தபய. எனவே, அவரது ராஜினாமாவைத் தொடர்ந்து நாட்டை ஆளும் பொறுப்பேற்று, சரியான செயல்திட்டத்தின் கீழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வை காண தயாராக இருக்கிறேன். கோத்தபய தலைமையில் பிரதமராக செயல்பட நாங்கள் தயாராக இல்லை’ என கூறி உள்ளார். இதன் காரணமாக அடுத்ததாக அதிபர் கோத்தபய பதவிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

* சீனா ‘கப்சிப்’
மகிந்த ராஜபக்சே இன்று பதவி இழந்து, உள்நாட்டிலேயே உயிருக்கு பயந்து பதுங்கி இருக்கும் நிலையில், அவரையும் சீனா கண்டுகொள்ளவில்லை. சீன தலைநகர் பீஜிங்கில், மகிந்தா ராஜினாமா தொடர்பான கேள்விக்கு அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லிஜியன் பதிலளிக்க மறுத்துவிட்டார். அவர் கூறுகையில், ‘‘இலங்கை சம்பவத்தின் சமீபத்தில் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனிக்கிறோம். அந்நாட்டு அரசும், எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையாக இருந்து பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமென விரும்புகிறோம்’’ என்றார். இதற்கிடையே, இலங்கை எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாசா, கொழும்புவில் சீன தூதரை சந்தித்து, இலங்கையின் பொருளாதார பிரச்னையில் சீனா உதவ வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்.

* எதிராக திரும்பும் எம்பி.க்கள் கோத்தபய பதவிக்கு ஆபத்து
இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனா தலைமையில் அனைத்து கட்சி எம்பிக்கள் கூட்டம் காணொலி வாயிலாக நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பெரும்பாலான எம்பி.க்கள், அதிபர் பதவியிலிருந்து கோத்தபய ராஜபக்சே விலக வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர். அதன் மூலம் மட்டுமே நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலுக்கு தீர்வு காண முடியும் என கூறி உள்ளனர். மேலும், அதிபருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி, அவர் மீது நாடாளுமன்றத்திற்கு நம்பிக்கை இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் எம்பிக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதனால் அடுத்ததாக கோத்தபய பதவிக்கும் ஆபத்து வந்துள்ளது.

* இந்தியா ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பாது
இலங்கைக்கு இந்திய ராணுவம் அங்கு அனுப்பப்பட இருப்பதாக இலங்கையின் சில செய்தி நிறுவன சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. அதே போல், மகிந்த ராஜபக்சே மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்திருப்பதாகவும் தகவல்கள் பரப்பப்பட்டன. இவற்றை கொழும்பில் உள்ள இந்திய தூதரம் முற்றிலுமாக மறுத்தது. அதன் டிவிட்டர் பதிவில், ‘சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை. இவற்றை முற்றிலும் தூதரகம் மறுக்கிறது. அத்தகைய நோக்கத்தை இந்திய அரசு கொண்டிருக்கவில்லை. இலங்கை மக்களின் நலனுக்கு இந்தியா எப்போதும் ஆதரவளிக்கும்’ என கூறப்பட்டுள்ளது.

* ஐநா கடும் கண்டனம்
இலங்கையில் மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதலுக்கு ஐநா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஐநா மனித உரிமைகள் ஆணைய தலைவர் மிச்செல் பச்லெட் அளித்த பேட்டியில், ‘‘இலங்கையில் மகிந்தா ஆதரவாளர்கள், பொதுமக்கள் மீது நடத்திய வன்முறை தாக்குதலால் மிகுந்த கவலை அடைகிறேன். இதுபோன்ற வன்முறைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். இந்த விவகாரத்தில் வன்முறையை தூண்டியவர்கள், வன்முறை செய்தவர்கள் மீது வெளிப்படையான, சுதந்திரமான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வன்முறைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்,’’ என்றார். இதே போல, ஐநா பொதுச் செயலாளர் ஆன்டோனியா கட்டரெசும், இலங்கை வன்முறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tags : Sri Lanka ,Colombo , Leaders fear for their lives as violence and arson continue in Sri Lanka: Army concentrates in capital Colombo
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...