நெல்லை மாவட்ட கோயில் வனங்களில் அபூர்வ மரங்கள் : கணக்கெடுப்பில் வியப்பூட்டும் தகவல்கள்

நெல்லை: நெல்லை மாவட்ட கோயில் வனங்களில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் வியப்பூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மணிமுத்தாறு அகத்திய மலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம் மற்றும் நெல்லை மாவட்ட நிர்வாகம் இணைந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள 131 பழமையான கோவில்களில் உள்ள மரங்களை கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 100 தன்னார்வலர்கள் ஈடுபட்டனர், இந்த கணக்கெடுப்பில் மரங்கள் அமைந்துள்ள இடம், புவியிட குறியீடு, மரத்தின் பெயர், சுற்றளவு, உயரம், வயது, மரத்தின் பெயர், மரம் தொடர்பான வரலாற்று தகவல்கள் போன்ற விபரங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த கணக்கெடுப்பில் 97 சிற்றினங்களைச் சேர்ந்த சுமார் 3664 மரங்கள் பதிவு செய்யப்பட்டன. அதிகபட்சமாக 841 வேப்பமரங்கள் உள்ளன. 512 தென்னை, 307 வில்வம், 196 தேக்கு, 120 மா, 102 அரசு, 102 நீர் மருது மரங்கள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக உவரி சுயம்புலிங்கசாமி கோயிலில் 25 சிற்றினம் சார்ந்த 318 மரங்கள் உள்ளன.

நெல்லையப்பர் கோயிலில் 30 சிற்றினங்களை சார்ந்த 294 மரங்கள் உள்ளன. நெல்லையப்பர் கோயிலில் உலக்கை பாலை மரம் உள்ளது. இந்த மரம் வேறு எந்தக் கோயிலிலும் இல்லை. இது போல் கணக்கெடுப்பில் மொத்தமாகவே 3 கடம்ப மரங்கள் பதிவாகி உள்ளன. கணக்கெடுக்கப்பட்ட 131 கோயில்களில் சுமார் 7 கோயில்களில் மரங்கள் ஏதும் இல்லை. 50 கோயில்களில் ஒற்றை இலக்க மரங்கள் உள்ளன. திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயில் நந்தவன மரங்களில் பறவைகள் கூடுகட்டியுள்ளன. ஆயிரக்கணக்கில் பழந்திண்ணி வவ்வால்கள் உள்ளன. மரநாய், அணில் போன்றவைகளும் உள்ளன.  தொடர்ந்து தென்காசி, தூத்துக்குடி மாவட்ட கோயில் நந்தவனங்களிலும் மரங்கள் கணக்கெடுப்பு பணி நடக்க உள்ளதாக ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் தெரிவித்தார்.

Related Stories: