×

அசானி புயல் காரணமாக கன்னியாகுமரியில் கடல் சீற்றம்: படகு சேவை தொடர்கிறது

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் கன்னியாகுமரியும் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடியது. இந்த நிலையில் தற்போது கொரோனா தாக்கம் வெகுவாக குறைந்துள்ளதால், இயல்பு நிலையும் திரும்பி வருகிறது. கன்னியாகுமரியிலும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் அசானி புயல் காரணமாக, குமரி மாவட்டத்திலும் பலத்த சூறைக்காற்றுடன் மழையும் பெய்து வருகிறது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதுபோல கன்னியாகுமரியிலும் நேற்றுமுதல் சூறைக்காற்று வீசி வருகிறது. மேலும் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. ராட்சத அலைகள் எழுந்து கரையையும், பாறைகளையும் ஆக்ரோஷத்துடன் மோதி வருகின்றன.

இருப்பினும் மீனவர்கள் வழக்கம்போல கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அதுபோல விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் படகு சேவையும் நடந்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க வேண்டாம் என போலீசார் எச்சரித்து வருகின்றனர். இதனால் முக்கடல் சங்கம பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் தூரத்தில் நின்று கடலழகையும், பாறைகளில் அலைகள் மோதி சிதறும் காட்சியையும் கண்டு ரசித்தனர்.

Tags : Kanyakumari ,Asani , Asani storm, Kumari, sea rage
× RELATED கன்னியாகுமரி மாவட்டத்தில் விசைப்படகு...