குமரி முழுவதும் சூறைக்காற்றுடன் மழை: மரங்கள் முறிந்து விழுந்ததால் மின் விநியோகம் பாதிப்பு

நாகர்கோவில்: குமரி மாவட்டம் முழுவதும் நேற்று மாலை தொடங்கி சூறைக்காற்றுடன் மழை பெய்தது. குமரி மாவட்டத்தில் நேற்றும் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறியுள்ளதால் குமரி மாவட்டத்திலும் அவ்வப்போது சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகள் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் இந்த மழை காணப்பட்டது. அதிகபட்சமாக இன்று காலை வரை மாம்பழத்துறையாறு அணை பகுதியில் 19 மி.மீ மழை பெய்திருந்தது. நாகர்கோவில் 10, முள்ளங்கினாவிளை 18.2, ஆனைக்கிடங்கு 17, பெருஞ்சாணி 8.2, திற்பரப்பு 7.4, பாலமோர் 7.4, புத்தன் அணை 7.4, இரணியல் 4, குருந்தன்கோடு 4, பூதப்பாண்டி 3.4, குளச்சல் 3.4, மயிலாடி 3.2, பேச்சிப்பாறை 3 மி.மீட்டரும் மழை பெய்திருந்தது. ஆரல்வாய்மொழி உள்ளிட்ட இடங்களில் மரக்கிளைகள் முறிந்து மின்சார ஒயர்கள் மீது விழுந்ததால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகேயும் மரக்கிளை முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக மரம் அகற்றப்பட்டது. நாகர்கோவில் பகுதியில் இன்று அதிகாலையில் பெய்த பலத்த மழை காரணமாக அசம்புரோடு, ஆராட்டு ரோடு ஆகியவற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 41.58 அடியாகும். அணைக்கு 155 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. பெருஞ்சாணி நீர்மட்டம் 41.35 அடியாகும். அணைக்கு 91 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. சிற்றார்-1ல் 9.94 அடியாக நீர்மட்டம் காணப்பட்டது. சிற்றார்-2ல் 10.04 அடியாக நீர்மட்டம் உள்ளது. பொய்கையில் 18.20 அடியாக நீர்மட்டம் காணப்படுகிறது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 16.32 அடியாகும். அணைகள் மூடப்பட்டுள்ளன. முக்கடல் அணையின் நீர்மட்டம் 5 அடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 8.6 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Related Stories: