அசானி புயல் எதிரொலி வேதாரண்யத்தில் கடல் சீற்றம் 3வது நாளாக மீனவர்கள் முடக்கம்

திருச்சி:  வங்க கடலில் மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய பகுதியில் நிலவிய தீவிர புயலான அசானி, நேற்று வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து வட ஆந்திரா- ஒடிசா கடற்கரையை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிக்கு வந்தது. இதற்கிடையே தீவிர தன்மை குறைந்து புயலாக மாறியது. அசானி புயலால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.  நேற்று மாலை முதல் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி மாவட்டங்களில் வானில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. நாகை மாவட்டத்தில் இன்று 3வது நாளாக பைபர் படகு மீனவர்கள் 3,000 பேர், கடலுக்கு செல்லவில்லை. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நாகை துறைமுகம், காரைக்கால் தனியார் துறைமுகத்தில் இன்று 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுத்துறை, மணியன்தீவு, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் ஆகிய மீனவ கிராமங்களில் நேற்று திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டு கடல்நீர் 200 மீட்டர் வரை கரையை நோக்கி வந்தது. இதனால் பொதுமக்கள் அச்சத்துக்கு ஆளாகினர். இன்று காலையும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இன்று காலை நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் வெயில் அடித்தது. திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் வானில் கருமேகங்கள் திரண்டு பலத்த காற்று வீசியது. கோடை வெயில் அடிக்காமல் ரம்மியமாக குளிர்ந்த காற்று வீசியது.

Related Stories: