×

ஆண்டிபட்டி அருகே டயர் வெடித்து விபத்துக்குள்ளான பஸ் : 20 பயணிகள் படுகாயம்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே, டயர் வெடித்து தனியார் பஸ் விபத்துக்குள்ளானதில் 20 பயணிகள் பலத்த காயமடைந்தனர். மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்திலிருந்து, இன்று அதிகாலை 3 மணியளவில் தேனிக்கு தனியார் பஸ் ஒன்று கிளம்பியது. பஸ்சில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அதிகாலை 3.45 மணியளவில், ஆண்டிபட்டி கணவாயை கடந்து, அப்பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி அருகே சென்றபோது, திடீரென பஸ்சின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரத்தில் உள்ள தனியார் கோழிப்பண்ணைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.

இதில் பஸ் டிரைவர், கண்டக்டர், 5 பெண்கள் உள்பட 20 பேர் பலத்த காயமடைந்தனர். மேலும் பஸ் மோதி மேற்கூரை சரிந்ததில், பண்ணையில் இருந்த 50க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆண்டிபட்டி போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு, தேனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், சிவகங்கையை சேர்ந்த ரமேஷ்(45) என்பவர், மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags : Andipatti , Antipathy, tire, explosion, accident, bus
× RELATED பாஜவுடனான கூட்டணியால் எடப்பாடிக்கு அச்சம்: டிடிவி தினகரன் பேட்டி