சரிந்த பேனரை நிமிர்த்தி கட்டிய போது மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி: திருச்சி அருகே சோகம்

முசிறி: திருச்சி மாவட்டம் நெம்பர் 1 டோல்கேட் மேனகா நகரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. லால்குடி அடுத்த திருமங்கலத்தை சேர்ந்த செல்லத்துரை (47) வாட்ச்மேனாக உள்ளார். அடுக்குமாடி குடியிருப்பில்  மராமத்து பணிகள் நடந்து வருகிறது. இதில் வாத்தலை அடுத்த சென்னக்கரையை சேர்ந்த சேட்டு (36), விமல் (28) ஆகியோர் ஈடுபட்டனர். இந்நிலையில் குடியிருப்பு கட்டிடம் முன் அதன் உரிமையாளர் கமருதீன் என்பவர் அனுமதியின்றி விளம்பர பிளக்ஸ் போர்டு வைத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு காற்றுடன் பெய்த மழையால் விளம்பர பேனர் கீழே விழுந்து கிடந்தது.

நேற்று சேட்டு, விமல் ஆகியோர் விளம்பர பேனரை நிமிர்த்தி கட்டும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உதவியாக வாட்ச்மேன் செல்லதுரை இருந்தார். அப்போது அருகில் இருந்த டிரான்ஸ்பார்மருக்கு செல்லும் உயரழுத்த கம்பியில் பேனர் உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்ததில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். சேட்டு, செல்லத்துரை சம்பவ இடத்திலேயே இறந்தனர். விமல் படுகாயமடைந்தார். கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சேட்டு, செல்லத்துரை உடல்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த விமல், திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: