×

அனுமதியின்றி வைத்த பேனர்கள் அகற்றம்; மாநகராட்சி ஊழியர்களை தாக்கிய பாஜ நிர்வாகிகள் மீது வழக்கு: மதுரையில் பரபரப்பு

மதுரை: மதுரையில் அனுமதியின்றி வைத்த பேனர்களை அகற்றிய போது, மாநகராட்சி ஊழியர்களை தாக்கிய பாஜ மாநகர தலைவர் டாக்டர் சரவணன் உள்ளிட்ட 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை அழகர்கோவில் சாலை பகுதியில் உள்ள தனியார் விடுதியில், நேற்று மாவட்ட அளவிலான பாஜ ஆலோசனை கூட்டம் நடந்தது. மதுரை மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் தலைமை வகித்தார். இதில், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள்  கலந்து கொண்டனர். இந்நிலையில் மாநில நிர்வாகிகளை வரவேற்பதற்காக அழகர்கோவில் சாலையின் இருபுறமும் மாநகராட்சி மற்றும் போலீசார் அனுமதியின்றி, 30க்கும் மேற்பட்ட வரவேற்பு பேனர்களை பாஜவினர் வைத்திருந்தனர். அனுமதியில்லாமல் வைக்கப்பட்டிருந்ததால், அந்த பேனர்களை நேற்று மதியம் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். அதற்கு பாஜவினர் எதிர்ப்பு தெரிவித்து, மாநகராட்சி ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்த போது. பாஜவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது பாஜ மாவட்ட தலைவர் சரவணன் தலைமையிலான நிர்வாகிகள் சிலர், மாநகராட்சி பணியாளர்களை தாக்கினர். தொடர்ந்து போலீசார் தலையிட்டு, மாநகராட்சி ஊழியர்களை காப்பாற்றினர். இச்சம்பவத்தால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தங்களை பணி செய்ய விடாமல் தடுத்தும், தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று மாலை பாஜவினர் மீது தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதனடிப்படையில் பாஜ மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் உள்ளிட்ட 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அனுமதியின்றி வைத்த பேனரை அகற்ற வந்த மாநகராட்சி பணியாளர்களை, பாஜவினர் தாக்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags : BJP ,Madurai , madurai, banner, BJP, case
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...