×

மதுரை அருகே குழந்தை விற்பனை: மூதாட்டியிடம் போலீசார் விசாரணை

மதுரை: மதுரை அருகே குழந்தையை விற்பனை செய்த மூதாட்டியை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மதுரை மாவட்டம், மேலூர் அருகே கோட்டை நத்தம்பட்டியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 20 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கணவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவிக்கும், சிவகங்கை மாவட்டம், கல்லல் பகுதியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் ஒருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் அவர் கர்ப்பமடைந்துள்ளார். மருத்துவமனையில் பரிசோதனைக்கு சென்ற போது, குழந்தையை கலைக்க முடியாது என டாக்டர்கள் கூறியுள்ளனர். அதிர்ச்சியடைந்த அந்த பெண், கணவரின் உறவினர்களுக்கு இந்த சம்பவம் தெரிய கூடாது என நினைத்து, மதுரையில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு கடந்த வாரம் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை மற்றொரு கிராமத்தில் உள்ள மூதாட்டியிடம் வளர்க்க கொடுத்துள்ளார். ஆனால் அந்த மூதாட்டி, அதே ஊரைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு, அந்த குழந்தையை விற்று விட்டார். இதையறிந்த அந்த பெண், மூதாட்டியிடம் சென்று குழந்தையை கேட்டுள்ளார். அப்போது, ‘என்னிடம் நீங்கள்  குழந்தையை கொடுக்கவே இல்லை’ என கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த அந்த பெண், தனது உறவினர் ஒருவரின் உதவியுடன் மதுரை குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். அவர்கள் கீழவளவு போலீசார் உதவியுடன் குழந்தையை வளர்க்க கொடுத்த மூதாட்டியிடம் விசாரணை நடத்தினர்.

இதில், குழந்தை இல்லாத தம்பதிக்கு, குழந்தையை மூதாட்டி விற்று விட்டார் என்பது தெரிந்தது. குழந்தையை போலீசார் மீட்டு, தாயிடம் ஒப்படைத்தனர். மேலும் எவ்வளவு தொகைக்கு குழந்தை விற்பனை செய்யப்பட்டது? வேறு குழந்தைகளையும் மூதாட்டி விற்றுள்ளாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Madurai , Madurai, child trafficking, grandmother, investigation
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...