×

கேரளாவில் வேகமாக பரவும் தக்காளி காய்ச்சல் தமிழக எல்லையோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு

தென்காசி: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் முழுமையாக மீள முடியாத நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் கொல்லம், ஆரியங்காவு, அஞ்சல் உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி காய்ச்சல் என்னும் புதிய வகை காய்ச்சல் குழந்தைகளுக்கு பரவி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. காக்ஸ்சாக்கி வைரஸ் ஏ 16 என்ற வைரஸால் தக்காளி காய்ச்சல் நோய் ஏற்படுகிறது. இது மிதமான பாதிப்பையே ஏற்படுத்தும். தோலில் சிவப்பு தடிப்புகள் தோன்றுவதால் இதற்கு தக்காளி காய்ச்சல் என்று பெயர் வைத்துள்ளனர். காய்ச்சல், தொண்டை எரிச்சல், தொண்டை, வாய் மற்றும் நாக்கில் புண், தலைவலி, கை, கால், முதுகுக்கு கீழ் மற்றும் பாதங்களில் கொப்பளங்கள் தோன்றுதல், பசியின்மை, தோலில் அரிப்பு, பின்னர் அங்கு சிவப்பு நிறத்தில் தட்டையாக மாறுதல், சில நேரங்களில் கொப்புளங்களாகவும் மாறுதல் ஆகியவை தக்காளி காய்ச்சலின் அறிகுறிகளாக உள்ளன. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் 85 குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டிற்குள் தக்காளி காய்ச்சல் பரவுவதை தடுக்க எல்லையோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தென்காசி மாவட்டத்தின் எல்லை பகுதியை ஒட்டி கொல்லம் மாவட்டம் அமைந்துள்ளதால் தென்காசி மாவட்டத்தில் தக்காளி காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பதை கண்டறியவும், இக்காய்ச்சல் வராமல் தடுப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. இதுகுறித்து தென்காசி சுகாதார பணிகள் துணை இயக்குனர் கூறுகையில், ‘கேரளாவில் தக்காளி காய்ச்சல் பரவுவதாக கிடைத்த தகவலையடுத்து தென்காசி மாவட்டத்தில் குறிப்பாக எல்லை பகுதிகளில் சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு இதுகுறித்து விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளை பாதிக்கும். பாதிப்பு ஏற்பட்ட குழந்தைகளுடன் தொடர்பில் உள்ளவர்களுக்கும் பரவும். உடலில் ஏற்படும் கொப்பளங்கள் கிட்டத்தட்ட அம்மை நோயை போன்றது. 10 நாட்களில் சரியாகிவிடும். பொதுமக்கள் இந்நோய் குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை. குழந்தைகளுக்கு சிவப்பு புள்ளிகள் மட்டுமின்றி காய்ச்சலுடன் வேறு வித்தியாசமான அறிகுறிகள் தென்பட்டாலும் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மருத்துவமனையை அணுக வேண்டும்’ என்றார். தக்காளி காய்ச்சல் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளை பாதிக்கும். பாதிப்பு ஏற்பட்ட குழந்தைகளுடன் தொடர்பில் உள்ளவர்களுக்கும் பரவும்.


Tags : Kerala ,Tamil Nadu , Kerala, Tomato Fever, Tamil Nadu Border, Intensive Surveillance
× RELATED தமிழக – கேரள எல்லையோர கிராமங்களில்...