ஆசிட் வீச்சில் கைதாகி விடுதலையான நிலையில் 17 ஆண்டுக்கு பின் அதே பெண்ணை தேடி பலாத்காரம்: கான்பூர் குற்றவாளி பெங்களூருவில் கைது

புதுடெல்லி: ஆசிட் வீச்சில் கைதாகி விடுதலையான நிலையில், கிட்டத்தட்ட 17 ஆண்டுக்கு பின் அதே பெண்ணை தேடி பலாத்காரம் செய்த கான்பூர் குற்றவாளியை பெங்களூருவில் போலீசார் கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த கபில் குப்தா என்ற ஆஷிஷ் (42) என்பவர், கடந்த 2005ம் ஆண்டு பெண் ஒருவர் மீது ஆசிட் வீசினார். இந்த சம்பவத்தில் அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில், சிறை தண்டனையை அனுபவித்து விடுதலையானார். வெளியே வந்த அவர், ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணின் இருப்பிடம் குறித்து தனக்கு தெரிந்தவர்கள் மூலம் அறிந்து கொண்டார். இதன்பின் கிட்டத்தட்ட 17 ஆண்டுக்கு பின்னர் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பரில், டெல்லியில் வசித்த அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று அவரை மிரட்டியுள்ளார்.

பெண்ணின் கணவர் மற்றும் குழந்தைகள் மீது ஆசிட் வீசி விடுவேன் என்று அச்சுறுத்தல் விடுத்தார். இதன்பின் வீட்டில் இருந்த அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, அதனை புகைப்படம் பிடித்து வைத்து கொண்டு அவ்வப்போது மிரட்டி வந்துள்ளார். இதனால் கடந்த 3 மாதங்களாக அந்த பெண் போலீசிடம் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததால், அந்த பெண் டெல்லி சுல்தான்புரி காவல் நிலையத்தில் கபில் குப்தா மீது புகார் அளித்தார். அவர்கள் கடந்த மார்ச்சில் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த கபில் குப்தாவை தேடி வந்துள்ளனர். இறுதியாக, கண்காணிப்பு கேமிரா உதவியுடன் பெங்களூருவில் பதுங்கியிருந்த கபில் குப்தாவை போலீசார் கைது செய்து டெல்லிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: