கல்குவாரி ஒப்பந்த விவகாரம் தாய்க்கு உடம்பு சரியில்லை 30 நாள் அவகாசம் கொடுங்க!: தேர்தல் கமிஷனுக்கு ஜார்க்கண்ட் முதல்வர் பதில்

ராஞ்சி: கல்குவாரி ஒப்பந்த விவகாரத்தில் சிக்கியுள்ள ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், தேர்தல் கமிஷன் அனுப்பிய நோட்டீசுக்கு மேலும் 30 நாட்கள் அவகாசம் ேகட்டு கடிதம் எழுதியுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் தனது முதல்வர் பதவியை பயன்படுத்தி, கல்குவாரி குத்தகை ஒப்பந்தத்தை சொந்த பெயரில் எடுத்து பலன் அடைந்துள்ளதாக,  முதல்வர் ஹேமந்த் சோரன் மீது ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக பதில் அளிக்குமாறு, ஹேமந்த் சோரனுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதையடுத்து மாநில பாஜ சார்பில் முதல்வரை பதவி நீக்கம் செய்யக் கோரி அம்மாநில ஆளுநரிடம் புகார் மனு அளித்தனர்.

அவர் அதனை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்தார். அதையடுத்து கல்குவாரி ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு, ஜார்க்கண்ட் மாநில அரசுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. மேலும், ‘பதவியை பயன்படுத்தி பலன் அடைந்துள்ள உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது; வரும் 10ம் தேதிக்குள் (நேற்று) பதில் அளிக்க வேண்டும்’ என, முதல்வரிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், ராஞ்சியில் முதல்வர் ஹேமந்த் சோரன் கூறுகையில், ‘தேர்தல் கமிஷன் அனுப்பியுள்ள நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க, 30 நாட்கள் கால அவகாசம் கேட்டுள்ளேன்.

இந்தியில் உள்ள ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்ய வேண்டும்’ என்றார். மேலும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அவர் அளித்த பதிலில், ‘என் தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளேன். இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீசை இன்னும் முழுமையாக படிக்கவில்லை. சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து பதில் அளிக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

Related Stories: