×

நாகர்கோவிலில் அரசு கலைக்கல்லூரி விழா சீருடை அணியாமல் வந்த மாணவர்கள் வெளியேற்றம்-திடீர் போராட்டத்தால் பரபரப்பு

நாகர்கோவில் : நாகர்கோவில் அரசு கலைக்கல்லூரியில் நடந்த விழாவில் பங்கேற்க கலர் ஆடையில் வந்த மாணவர்களை வெளியேற்றியதால், திடீர் போராட்டம் நடைபெற்றது.
நாகர்கோவில் கோணத்தில் அரசு கலைக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் பட்டமளிப்பு விழா, ஆண்டு விழா, முத்தமிழ் விழா, விளையாட்டு விழா, நுண்கலை மன்ற விழா ஆகிய ஐம்பெரும் விழாக்கள் கடந்த 6ம் தேதி தொடங்கியது. முதல் நாள் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பின்னர் ஆண்டு விழா உள்ளிட்டவை நடைபெற்றன. நேற்று (10ம்தேதி) விளையாட்டு விழா மற்றும் நுண்கலை மன்ற விழா நடந்தது. கல்லூரி முதல்வர் பிரகாசி அருள்ஜோதி தலைமை வகித்தார். பேராசிரியர், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் தவிர மற்ற அனைத்து மாணவ, மாணவிகளும் சீருடையில் தான் வர வேண்டும். அடையாள அட்டை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால்  100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சீருடையில் வராமல், கலர் ஆடை அணிந்திருந்தனர்.  மாணவர்கள் சிலர் கருப்பு நிற பனியன், பேன்ட்ஸ் அணிந்து வந்திருந்தனர். சீருடை அணிந்து அடையாள அட்டை வைத்திருந்தவர்களை மட்டுமே உள்ளே அனுமதித்தனர். மற்ற மாணவ, மாணவிகளை உள்ளே அனுமதிக்க வில்லை. இதனால் தங்களையும் உள்ளே அனுமதிக்க கோரி மாணவ, மாணவிகள் கல்லூரி முன் போராட்டம் நடத்தினர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் நேசமணிநகர் இன்ஸ்பெக்டர் ஜெயலெட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குட்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். கல்லூரி நிர்வாக தரப்பிலும் பேச்சு வார்த்தை நடந்தது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் இருந்து அடையாள அட்டைகளை வாங்கிக்கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதித்தனர். இதையடுத்து  பரபரப்பு முடிவுக்கு வந்தது. விழா முடிவடையும் வரை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Tags : Government Art College Festival ,Nagarkovil , Nagercoil: Sudden protest as students in colored clothes were evicted from attending a function at the Government Arts College in Nagercoil.
× RELATED புனித வெள்ளி, வார விடுமுறையை...