முடங்கியே கிடக்கும் முன்மாதிரி திட்டம் காய்கறி கழிவில் மின்சாரம் தயாரிப்பு மீண்டும் எப்போது? திண்டுக்கல் மாநகராட்சி மக்கள் கேள்வி

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் அதிமுக ஆட்சியில் ஒரு வருடமே செயல்பாட்டில் இருந்த காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் இன்று வரை முடங்கியே கிடக்கிறது. இதனை செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திண்டுக்கல் மாநகராட்சியில் காய்கறி கழிவுகளை கொண்டு மின்சாரம் தயாரிக்கும் திட்டம் கடந்த 2013-2014ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதற்காக திண்டுக்கல் நகரில் அன்றாடம் வீடுகள், காய்கறி சந்தைகள், திருமண மண்டபங்களில் சேகரிக்கப்படும் பசுமை கழிவுகளான காய்கறி கழிவுகளை கொண்டு 400 கி.வாட். மின்சாரம் தயாரிக்க அப்போதிருந்த (அதிமுக) மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

இத்திட்டத்திற்கு நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை ரூ.90 லட்சம் நிதி ஒதுக்கியது. மலைக்கோட்டை அடிவார பகுதியில் இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு 5 மெட்ரிக் டன் காய்கறி கழிவுகளை கொண்டு மின்சாரம் தயாரிக்கும் திட்ட பணிகள் நடைபெற்றது. கடந்த 2017ம் ஆண்டு திட்ட பணிகள் நிறைவு பெற்று அப்போதிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள நீரேற்று நிலையம், மாநகரராட்சி பகுதிகளில் உள்ள தெரு விளக்குகளுக்கும் பயன்படுத்த ஏற்பாடுகள் நடைபெற்றது.

இதன்மூலம் மாநகராட்சிக்கு தினமும் ரூ.5000 வரை மின்கட்டணம் மிச்சமானது. மேலும் மின்சாரம் உற்பத்திக்கு பிறகு கிடைக்கும் கழிவுகளை விவசாய நிலங்களுக்கு உரமாக பயன்படுத்தப்பட்டது. ஆனால் இதன் திறப்பு விழா நடந்து ஒரு வருடம் மட்டுமே செயல்பாட்டில் இருந்தது. அதன்பின் நகர சுற்றுசூழல் பாதுகாப்பினை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த முன்மாதிரியான திட்டம் இன்று வரை முடங்கிய கிடக்கிறது. இதன்மூலம் அதிமுக ஆட்சி காலத்தில் மக்களின் வரிப்பணம் பல லட்சம் ரூபாய் வீணடிக்கப்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக மாநகராட்சியில் மக்கள் பிரதிநிதி இல்லாமல் ஆணையரின் கட்டுபாட்டிலே இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர். குறிப்பாக கடந்த திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட பல திட்டங்கள் முடக்கி வைக்கப்பட்டிருந்தன. தற்போது தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் மக்களின் நலன்கருதி தேர்தல் நடத்த நடடிவக்கை எடுக்கப்பட்டது.

இதில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெறும்பான்மையுடன் திண்டுக்கல் மாநகராட்சியை கைப்பற்றியது. தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள மாநகராட்சி மேயர், கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் செய்த தவறையும், அதிகாரிகள் செய்த தவறையும் களைந்து இதுபோல் மாநகராட்சிக்கும் மக்களுக்கும் நன்மையளிக்கும் திட்டங்களை மீண்டும் தொடர வேண்டும்’ என்றனர்.

Related Stories: