×

காரியாபட்டி அருகே பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த மகாவீரர் சிலை கண்டெடுப்பு

காரியாபட்டி : காரியாபட்டி அருகே 10ம் நூற்றாண்டை சேர்ந்த சமண சிற்பமான மகாவீரர் சிலையை தொல்லியல் துறையினர் கண்டெடுத்தனர்.விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே பெ.புதுப்பட்டியில் தொல்லியல் ஆய்வாளர் ராகவன், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தொல்லியல் பட்டப்படிப்பு மாணவர்களான சரத்ராம், ராஜபாண்டி ஆகியோர் மேற்புற களஆய்வு மேற்கொண்டனர். அப்போது 3 அடி உயரம், இரண்டே கால் அடி அகலம் கொண்ட ஒரு சிலையை கண்டறிந்தனர்.

இதுகுறித்து ஓய்வு பெற்ற தொல்லியல் துறை துணை இயக்குனரும், பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய செயலாளரான சாந்தலிங்கத்திடம் கலந்து ஆலோசித்து இச்சிற்பம் பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த சமண சிற்பம் என உறுதி செய்யப்பட்டது.தொல்லியல் ஆய்வாளர் ராகவன் கூறுகையில், ‘‘இச்சிலை வர்த்தமானர் எனும் சமணர் சமயத்தின் 24வது தீர்த்தங்கரான மகாவீரர் சிலையாகும்.

தியான நிலையில் அமர்ந்தவாறும் அர்த்தபரியங்க ஆசனத்தில் யோக முத்திரையுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தலையின் பின்புறம் முக்காலத்தையும் உணர்த்தும் ஒளிவீசும் பிரபா வளையம், பின்புலத்தில் குங்கிலிய மரம், பக்கவாட்டில் சித்தாக்கிய இயக்கி, இயக்கனான மாதங்கன் சாமரம் வீசுவதுபோல் உள்ளது. இச்சமண சிலையை அங்குள்ள மக்கள் சமணர் சாமி என்று அழைத்தும், தங்களின் குலதெய்வமாக எண்ணியும், குறிப்பிட்ட நாளில் பொங்கலிட்டும், முடி காணிக்கை செலுத்தியும் வணங்கி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் சமணர் சார்ந்த நிகழ்வுகளை தொடர்ச்சியாக காணும்போது மக்கள் சமய சகிப்புத்தன்மை கொண்டிருந்தனர் என்பதையும் உணர முடிகிறது. எனவே தொல்லியல் ஆய்வு மையம், இதுகுறித்து மேலும் ஆய்வு செய்ய வேண்டும்’’ என்றார்.

Tags : Mahavira ,Kariyapatti , Kariyapatti: Archaeologists have unearthed a 10th century Jain statue of Mahavira near Kariyapatti.
× RELATED காரியாபட்டி நகரில் தேங்கி கிடக்கும்...