×

லக்னோவை வீழ்த்தி பிளேஆப் சுற்றுக்கு முதல்அணியாக தகுதி இளம் வீரர்களை நினைத்து பெருமையாக இருக்கிறது: குஜராத் கேப்டன் ஹர்த்திக் பாண்டியா மகிழ்ச்சி

புனே: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புனேவில் நேற்று நடந்த 57வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மோதின. டாஸ் வென்ற குஜராத் பேட்டிங்கை தேர்வு  செய்தது. 20 ஓவரில் அந்த அணி 4விக்கெட் இழப்பிற்கு 144ரன் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் சுப்மான் கில் நாட்அவுட்டாக 49 பந்தில் 7பவுண்டரியுடன் 63 ரன் எடுத்தார். டேவிட்மில்லர் 26, ராகுல் திவேதியா ஆட்டம் இழக்காமல் 22(16பந்து) அடித்தனர். கேப்டன் ஹர்த்திக் பாண்டியா 11, மேத்யூவேட் 10, சகா 5 ரன்னில் ஆட்டம் இழந்தனர். குஜராத் பந்துவீச்சில் அவேஷ்கான்2விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் களம் இறங்கிய லக்னோ, குஜராத் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 13.5 ஓவரில் 82 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் 62 ரன் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றிபெற்றது. லக்னோ அணியில் தீபக்கூடா 27, சமீரா 12, டிகாக் 11 ரன் எடுக்க, கே.எல்.ராகுல் 8, கரண்சர்மா 4, குர்ணல் பாண்டியா 5, படோனி 8,ஸ்டோனிஸ் 2, ஹோல்டர் 1 என ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்தனர். குஜராத் பந்து வீச்சில் ரஷித்கான் 4, யாஷ் தயாள், தமிழகத்தைச் சேர்ந்தசாய் கிஷோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். சுப்மான் கில் ஆட்டநாயகன் விருது பெற்றார். 12வது போட்டியில் 9வது வெற்றிபெற்ற குஜராத் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியதுடன் பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. லக்னோ 4வது தோல்வியை சந்தித்தது.

வெற்றிக்கு பின் குஜராத் கேப்டன் ஹர்த்திக பாண்டியா அளித்தபேட்டி:  உண்மையிலேயே இளம்வீரர்களை நினைத்து பெருமையாக இருக்கிறது. கடைசி லீக் ஆட்டத்திற்கு முன்பே பிளேஆப்பிற்கு தகுதிபெறுவது பெரும் முயற்சி. நாங்கள் ஒன்றாக இந்தப் பயணத்தைத் தொடங்கியபோது, ​​வெளிப்படையாக எங்கள் மீது நம்பிக்கை வைத்தோம். நாங்கள் வென்ற அனைத்து விளையாட்டுகளிலும் நாங்கள் எப்போதும் அழுத்தத்தில் இருந்தோம் என்று நினைக்கிறேன். சாய் கிஷோரை ஒரு இடது கை சுழற்பந்து வீச்சாளராக மிகவும் உயர்வாக மதிப்பிடுகிறேன். எங்களிடம் இருந்த வேகப்பந்து வீச்சாளர்கள் காரணமாக அவரையும் ஜெயந்த் யாதவையும் ஆடும் லெவனில் சேர்க்கமுடியவில்லை. இன்று நாங்கள் எல்லா துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டோம், என்றார்.

தோல்வி குறித்து லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் கூறுகையில். இது ஒரு வித்தியாசமான,  சவாலான பிட்ச். பந்துவீச்சில் நன்றாக செயல்பட்டோம்.  எதிரணியை 150ரன்னுக்குள் கட்டுப்படுத்துவது உண்மையிலேயே பாராட்டுக்குரியது. நாங்கள் இன்னும் சிறப்பாக பேட்டிங் செய்திருக்க வேண்டும். சில மோசமான ஷாட் தேர்வு மற்றும் ஒரு ரன்அவுட் தேவையில்லாதது.  இந்த குறைந்த இலக்கு சேசிங்கில் பவர் பிளேவில் 60 ரன் தேவையில்லை. விக்கெட் இழக்காமல் 35,45 ரன் எடுத்தாலே சிறந்ததாக இருந்திருக்கும். எங்களுக்கு நல்ல கற்றல், இது போன்ற இழப்பிலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம் என்று நம்புகிறேன், என்றார்.

நிறைவு விழா கலைநிகழ்ச்சியில் ரன்வீர்சிங், ஏ.ஆர்.ரகுமான்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் தொடக்க விழா நடத்தப்படாத நிலையில் நிறைவு விழாவை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ஐபிஎல் பைனல் வரும் 29ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இந்தபோட்டிக்கு முன்னதாக 45 நிமிடம் நிறைவு விழா கலைநிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டையொட்டி, கடந்த 75 ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட்டின் பயணத்தை பதிவு செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதில் பாலிவுட் நடிகர் ரன்வீர்சிங், இசைஅமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ஆகியோர் பங்கேற்கின்றனர். நிறைவு விழாவிற்கு அனைத்து முன்னாள் இந்திய அணி கேப்டன்களையும் அழைக்க திட்டமிட்டுள்ளது.

பிட்ஸ்...
* நடப்பு ஐபிஎல்லில் கடைசி 5 போட்டியிலும் முதலில் பேட்டிங் செய்த அணிகளே வென்றுள்ளன. 5 போட்டியிலும் வெற்றி வித்தியாசம் 50 ரன்னுக்கும் அதிகமாக உள்ளது.
* இந்த ஐபிஎல்லில் குறைந்த சிக்சர் அடித்த அணியாக குஜராத் (58 சிக்சர்) உள்ளது. ராஜஸ்தான் 102 சிக்சருடன் முதல் இடத்தில் உள்ளது சென்னை 91, கேகேஆர் 89,பஞ்சாப் 82, டெல்லி 81 சிக்சர் அடித்துள்ளன.
* இடது கையின் தசைபிடிப்பில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ஐபிஎல்லில் இருந்து விலகிய மும்பையின் சூர்யகுமார்யாதவ் தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான 5 போட்டி கொண்ட டி.20 தொடரில் பங்கேற்க முடியாது. காயம் குணமாக ஒருமாதம் ஆகும் என்பதால் அவர் தொடரை இழக்கிறார்.

Tags : Gujarat ,Hardik Pandya ,Lucknow , Lucknow, Playoff, Gujarat, Hardik Pandya
× RELATED டி20 உலக கோப்பையில் பங்குபெற ஐபிஎல்...