திருக்கழுக்குன்றத்தில் இன்று வேதகிரீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை தேரோட்டம்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை திருவிழாவின் 7ம் நாளான இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். பட்சி தீர்த்தம், வேதமலை என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் திருக்கழுக்குன்றத்தில் பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் ஆலயம் உள்ளது. இது, சிவத்தலங்களில் முக்கியத் தலமாக விளங்குகிறது. இதனால் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசித்து செல்கின்றனர். இக்கோயிலில் ஆண்டுதோறும் 11 நாட்கள் சித்திரை திருவிழா நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக தேரோட்டம் நடைபெறவில்லை.

இந்நிலையில், இந்த ஆண்டு மலைக்கோயில் மீதுள்ள வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் 11 நாள் சித்திரை திருவிழா கடந்த 5ம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைத் தொடர்ந்து தினமும் அபிஷேக ஆராதனைகள் உள்பட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும், மாடவீதிகளில் உற்சவர் வீதியுலாவும் நடைபெற்று வந்தது. இந்நிலையில், 7ம் நாளான இன்று காலை வேதகிரீஸ்வரர் ஆலயத்தில் பெரிய தேர் உற்சவம் நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் வேதகிரீஸ்வரர் எழுந்தருளச்செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதைத்தொடர்ந்து காலை 6 மணியளவில் பக்தர்கள் ஓம் நமசிவாய என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

முன்னதாக விநாயகர் தேரும் பின்னால் வேதகிரீஸ்வரரின் பெரிய தேரும், இதைத் தொடர்ந்து திரிபுரசுந்தரியம்மன், முருகர், சண்டிகேஸ்வரர் என 5 தேர்களும் அழகாக அசைந்தாடி 4 மாட வீதிகளில் வலம் வந்தது. இந்த தேரோட்டத்தில் திருக்கழுக்குன்றம் உள்பட பல்வேறு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

வழிநெடுகிலும் பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர், குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இத்தேரோட்டத்தில் பங்கேற்கும் மக்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளுக்கு திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவர் ஜி.டி.யுவராஜ், துணை தலைவர் வீ.அருள்மணி மற்றும் வார்டு கவுன்சிலர்கள் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

Related Stories: