கேரளாவில் பரவி வரும் தக்காளி காய்ச்சல் வாளையாரில் கண்காணிப்பு தீவிரம்

மதுக்கரை: கேரளாவில் குழந்தைகளிடம் தக்காளி காய்ச்சல் பரவி வரும் நிலையில், தமிழக-கேரளா எல்லையான வாளையாரில் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் தக்காளி காய்ச்சல் என்ற புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. இதனால், 85 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த காய்ச்சல் காரணமாக 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

காய்ச்சல் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உடல்வலி, சோர்வு, கை, கால்கள் வெள்ளை நிறமாக மாறுதல், முகத்தில் சிவப்பு நிற புள்ளிகள் தோன்றுகிறது. இந்த காய்ச்சலுடன் தோலில் சிவப்பு நிற தடிப்புகள் ஏற்படுவதால் இதனை தக்காளி காய்ச்சல் என்கின்றனர். கேரளாவில் பரவி வரும் தக்காளி காய்ச்சல் தமிழகத்திலும் பரவும் அபாயம் இருப்பதால் தமிழக, கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழக-கேரள எல்லை பகுதியில் உள்ள வாளையார், வேலந்தாவளம், மாங்கரை, நடுப்புணி, மீனாட்சிபுரம், கோபாலபுரம் உள்ளிட்ட 13 சோதனைச்சாவடிகளிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, வாளையார் சோதனைச்சாவடியில் கேரளாவில் இருந்து கோவைக்குள் வரும் நபர்களுக்கு காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதா? என பரிசோதனை செய்ய இரண்டு சுகாதார ஆய்வாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தவிர, மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களிலும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதா? என்பதை கண்டறிய 24 பேர் அடங்கிய குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள், குழந்தைகளுக்கு காய்ச்சல் தொடர்பாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் கேரளா எல்லையில் உள்ள கிராமங்களில் இருக்கும் அங்கன்வாடி மையங்களுக்கு சென்று குழந்தைகளுக்கு காய்ச்சல் இருக்கிறதா? என்று விசாரிக்கின்றனர். அப்படி எந்த குழந்தைக்காவது காய்ச்சல் இருந்தால் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். மதுக்கரை வட்டார மருத்துவ அலுவலர் அழகு ராஜலட்சுமி ஆலோசனைப்படி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி ராஜன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் தீவிர பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரளாவில் இருந்து உக்கடம் வரும் பேருந்துகள் வாட்டர் வாஸ்

தக்காளி வைரஸ் காரணமாக எல்லை பகுதிகளில் கடும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சூர், பாலக்காடு, வாளையார் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு 20க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நோய் காரணமாக கேரளாவில் இருந்து உக்கடம் வரும் பேருந்துகள் வாட்டர் வாஸ் செய்து சுத்தம் செய்யப்படுகின்றன.  இது குறித்து கோவை அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பேருந்துகள் முழுவதுமாக தினமும் வாட்டர் வாஸ் செய்யப்படுகிறது. பேருந்துகளின் உள் பகுதியில் மக்கள் அதிகம் தொடும் இடங்களில் கிருமி நாசினி கொண்டும் சுத்தப்படுத்தப்படுகிறது’’ என்றார்.

Related Stories: