பள்ளிபாளையத்தில் பழுதடைந்த காவேரி பாலத்தில் வாகன ஓட்டிகள் ஆபத்து பயணம்-வாகனங்களை பதம் பார்க்கும் அவலம்

பள்ளிபாளையம் : பள்ளிபாளையத்தில் ₹18 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள காவேரி பாலம் பழுதடைந்து காணப்படுகிறது. பாலத்தில் தென்படும் கம்பிகள் கிழிப்பதால், வாகனங்கள் டயர்கள் பஞ்சராகும் நிலை ஏற்பட்டுள்ளது.பள்ளிபாளையம் காவேரி தரைப்பாலம், ₹18 கோடி செலவில் கட்டி திறக்கப்பட்டு 4 ஆண்டுகளாகிறது. கட்டுமான பணிகளில் தரம் இல்லாதால் காவிரி ஆற்றின் நீர் பாலத்திற்கு அடியில் ஊறி கசிந்து, கான்கிரீட் சாலையை சேதப்படுத்தி வருகிறது. பாலத்தில் 3 இடங்களில் கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் நீட்டிக்கொண்டிருப்பதால், வாகனங்களின் டயர்கள் கிழிந்து பஞ்சராக்கப்பட்டு வருகிறது. பாலம் கட்டிய போதே, இதன் தரத்தில் கவனம் செலுத்தாததால் 4 வருடம் கூட இந்த சாலை தாக்கு பிடிக்கவில்லை.

மேம்பாலம் கட்டுமான பணிக்காக பள்ளிபாளையத்திலிருந்து ஆலாம்பாளையம் வரை, சாலைகள் தோண்டப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், திருச்செங்கோடு செல்லும் அனைத்து வாகனங்களும் காகித ஆலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. மேம்பாலம் கட்டுமான பணிக்கான காலம் 2 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், அதுவரை திருச்செங்கோடு சென்று வரும் அனைத்து வாகனங்களும், இந்த காவேரி தரைப்பாலத்தின் வழியாகவே சென்று வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், காவேரி பாலத்தில் சேதம் அதிகமாகி போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால், தற்காலிகமாக இந்த பாதையை ஒருவழிப்பாதையாக்கி, வெப்படை ஆனங்கூர் வழியாக திருச்செங்கோடு வழியாக மாற்றி விட்டு, தரைப்பாலத்தின் சேதத்தை சீரமைக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, காவேரி தரைப்பாலத்தை சீரமைக்காவிட்டால், பள்ளிபாளையத்தில் வாகன போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்படும் என வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

Related Stories: