பல்லடம், பொங்கலூரில் கெட்டுப்போன 175 கிலோ மீன்கள் அழிப்பு-உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

திருப்பூர் : உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில், உணவு பாதுகாப்புக்குழுவினர் திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்லடம் நகராட்சி மற்றும் பொங்கலூர் பகுதிகளில் உள்ள 7 மீன் விற்பனை கடைகள் மற்றும் பொரித்த மீன் விற்பனைக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில், 175 கிலோ கெட்டுப்பான மற்றும் பதப்படுத்தப்பட்ட மீன் இறைச்சிகள் கண்டறியப்பட்டு பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டன.

மேலும் 2 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டம் 2006 பிரிவு 55-ன்படி நோட்டீஸ் வழங்கப்பட்டது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘மாவட்ட கலெக்டர் வினீத் உத்தரவின் பேரில், பல்லடம் மற்றும் பொங்கலூர் பகுதிகளில் உள்ள மீன் கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு, 175 கிலோ கெட்டுப்போன மீன் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மீன் விற்பனை செய்யும் கடைகளில், மீன் இறைச்சியை சரியான வெப்பநிலை காட்டும் குளிர்சாதனப் பெட்டியில் உரிய முறையில் பாதுகாக்கப்பட வேண்டும். மேலும், சமைத்த மீன் இறைச்சியை குளிர்சாதனப் பெட்டியில் இருப்பு வைப்பது மீண்டும் சூடுப்படுத்தி விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும். ஆய்வின் போது இதுபோன்ற செயல்கள் ஏதேனும் கண்டறியப்பட்டால் கடுமையான நடடிக்கை மேற்கொள்ளப்படும்.

குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாக்கப்படும் மீன்களுக்கு தூளாக்கப்பட்ட ஐஸ் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் மீன்கள் உடனடியாக விற்பனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். நீண்ட நாட்களுக்கு குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பராமரித்து விற்பனை செய்யக்கூடாது. மீன் இறைச்சி எங்கிருந்து வாங்கப்பட்டது என்ற ரசீதை எப்போதும் பராமரிக்கப்பட வேண்டும். ஆய்வு மேற்கொள்ளும்போது சமர்ப்பிக்கப்பட வேண்டும். கத்தி, அரிவாள் போன்றவை துருப்பிடிக்காமல் நல்ல நிலையில் இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் மீன் விற்பனை கடைக்காரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தொடர் ஆய்வுகள் மாவட்டம் முவதும் தொடர்ந்து நடைபெறும்’’ என்றனர்.

Related Stories: