கடலூர் அருகே தனியார் கம்பெனியில் திருட்டை தடுக்க முயன்ற போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

* மர்ம கும்பல் தப்பி ஓட்டம்: வெடிக்காத குண்டுகளை கைப்பற்றி விசாரணை

புவனகிரி: புதுச்சத்திரம் தனியார் கம்பெனியில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம கும்பலை போலீசார் தடுக்க முயன்றனர். இதனால் அவர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு மர்ம கும்பல் தப்பியது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பின்னர் வெடிக்காத சில குண்டுகளை போலீசார் கைப்பற்றி மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் அடுத்த புதுச்சத்திரம் அருகே உள்ள பெரியகுப்பம் கிராமத்தில் 2800 ஏக்கர் பரப்பளவில் தனியார் கம்பெனி உள்ளது. தற்போது இயங்கவில்லை. இந்த கம்பெனியில் சுற்றுச்சுவர் போதுமான அளவில் இல்லாததாலும், குறைந்த அளவிலான காவலாளிகள் மட்டுமே பணியில் உள்ளதாலும் சிலர் அடிக்கடி கம்பெனிக்குள் புகுந்து இரும்பு பொருட்களை திருடி சென்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்கதையாக நடந்து வருவது போலீசாருக்கு பெரும் தலைவலியாக இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கம்பெனியில் காவலாளிகள் பணியில் இருந்தபோது 25 பைக்குகளில் வந்தவர்கள் அங்கிருந்த இரும்பு பொருட்களை திருடி கொண்டிருந்தனர். அப்போது காவலாளிகள் வந்து விட்டனர். அவர்களை பார்த்ததும், அந்த கும்பல் பைக்குகளை போட்டுவிட்டு தப்பி ஓடியது. தகவலறிந்து புதுச்சத்திரம் போலீசார் விரைந்து வந்து, 25 பைக்குகளையும் கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். அதற்கு மறுநாளும் 28 பேர் கும்பல் கம்பெனியில் இரும்பு பொருட்களை திருடியபோது டிரோன் கேமரா கண்காணித்ததால் இதைப்பார்த்த அந்த கும்பல் 350 கிலோ இரும்பையும், 28 பைக்குகளையும் போட்டு விட்டு தப்பி ஓடினர். போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை அந்த கம்பெனியில் இரும்பு பொருட்களை திருடுவதற்காக ஒரு கும்பல் வந்துள்ளதாக தகவல் கிடைத்தது. புதுச்சத்திரம் போலீசார் விரைந்தனர். அப்போது இரும்பு பொருட்களை திருடி கொண்டிருந்த கும்பல், போலீசாரை கண்டதும் தப்பியோடியது. ஒரு கட்டத்தில் போலீசார் நெருங்கி வந்ததால், அந்த கும்பல் போலீசார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியது. போலீசார் குறிப்பிட்ட இடைவெளியில் நின்றதால் எவ்வித காயமும் ஏற்படவில்லை. அவர்கள் அருகிலேயே பெட்ரோல் குண்டு வெடித்து தீப்பிடித்தது. இதை சாதகமாக்கி அந்த கும்பல் தப்பி ஓடியது. இதையடுத்து போலீசார், வெடிக்காமல் இருந்த சில பெட்ேரால் குண்டுகளை கைப்பற்றி சென்றதாக கூறப்படுகிறது.

போலீசார் தீவிர விசாரணை நடத்தி, பெட்ரோல் குண்டுகளை வீசிய கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே இந்த கம்பெனிக்குள் மர்ம கும்பல் நுழைந்து பொருட்களை திருடுவதும், அவர்களை பிடித்து பொருட்களை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வரும் நிலையில் தற்போது போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: