தென்னை சாகுபடியில் வெள்ளை நோய் தாக்குதல்-வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்ய வலியுறுத்தல்

வேதாரண்யம் : வேதாரண்யம் தாலுகா நாலுவேதபதி, புஷ்பவனம், தலைஞாயிறு, தாமரைபுலம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை மரங்கள் உள்ளன. கஜா புயல் தாக்கத்தில் லட்சக்கணக்கில் தென்னை மரங்கள் அழிந்தது போக ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் மிஞ்சியது. கஜா புயல் பாதித்த தென்னை விவசாயிகளுக்கு சுமார் 3 லட்சம் தென்னை கன்றுகளை அரசு வழங்கியது. இதனை விவசாயிகள் ஆர்வமுடன் வாங்கி மிகுந்த சிரமப்பட்டு தென்னங் கன்றுகளை நட்டு வளர்த்து வந்தனர். இந்த தென்னங்கன்றுகளையும் புயலுக்குப் பிறகு மிஞ்சிய ஒரு சில தென்னை மரங்களையும் கூன்வண்டு தாக்குதல் கடுமையாக உள்ளது.

இந்த தாக்குதலில் அரசு வழங்கிய தென்னை கன்றுகளில் சரிபாதி வண்டு தாக்குதலால் அழிந்து விட்டது. தற்போது புதுவித நோயாக வெள்ளை ஈ நோய் தாக்குதல், தென்னை மரங்களலேயே தாக்கத் தொடங்கியுள்ளது.இந்த நோயிலிருந்து தென்னை மரங்கள் மீள்வதற்கு வாய்ப்பே இல்லை என விவசாயிகள் தெரிவித்தனர். கூன்வண்டு தாக்குதல் வெள்ளை ஈ நோய் தாக்குதலால் தென்னை சாகுபடி முற்றிலும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விவசாயத் துறையினர் தென்னை விவசாயிகளை அலட்சியம் செய்கின்றனர். தென்னை தோட்டங்களை விவசாய துறையினர் நேரில் பார்வையிட்டு விவசாயிகளுக்கு தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: