நாகை அருகே வீட்டில் திருட முயன்ற அரை டவுசர் திருடன் சிக்கினான்-மரத்தில் கட்டிவைத்து விடிய, விடிய பொதுமக்கள் காவல் காத்தனர்

நாகை : வேளாங்கண்ணியை அடுத்த தெற்கு பொய்கைநல்லூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வம். இவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் அரை டவுசர் அணிந்த குண்டு ஆசாமி ஒருவர் வந்தார். இதனைக் கண்டு சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் அவனை நோட்டம் விட்டபடியே பின் தொடர்ந்தனர். இதனை கண்டு சுதாரித்துக்கொண்ட அவர் அங்கிருந்து உடனடியாக ஓட்டம் பிடிக்க தொடங்கினார். சிறிது தூரம் ஓடிய அவர் கீழே விழுந்தார்.

விழுந்தவரை கிராம மக்கள் பிடித்து அங்குள்ள மரத்தில் கட்டி வைத்தனர். அவனிடம் சரமாரியாக அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி உள்ளனர். இதில் அரை டவுசர் போட்ட கருப்பு குண்டன் சென்னையை சேர்ந்த வினோத்ராஜ் என்பதும் ஏற்கனவே அதே பகுதியில் காணாமல் போன கணேசன் என்பவருக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தை திருடியதையும் ஒப்புக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து வேளாங்கண்ணி போலீசாருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். இருப்பினும் இரவு நேரங்களில் கைதிகளை காவல்நிலையத்தில் வைத்திருக்க கூடாது என்ற உத்தரவினால், கிராம மக்களே திருடனை விடிய விடிய காவல் காத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: