வேலூர் மாவட்டத்தில் உள்ள சாலைகளில் 120 இடங்களில் வாகனங்கள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது-கோட்ட பொறியாளர் ஆய்வு

வேலூர் :  தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சாலைகளில் செல்லும் வாகனங்கள் குறித்து போக்குவரத்து கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2017ம் ஆண்டு போக்குவரத்து கணக்கெடுப்பு பணிகள் நடந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக போக்குவரத்து கணக்கெடுப்பு பணிகள் நடைபெறவில்லை. இந்நிலையில், மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் தமிழகத்தின் பல பகுதிகளில் போக்குவரத்து கணக்கெடுப்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

அதன்படி, வேலூர் நெடுஞ்சாலை துறை கோட்டத்தில் வேலூர், காட்பாடி, குடியாத்தம் ஆகிய உட்கோட்டங்களில் சுமார் 1,060 கி.மீட்டர் சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த சாலைகளில் 24 மணி நேரத்தில் செல்லும் சைக்கிள், பைக், லாரிகள், பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது. தொடர்ந்து வரும் 16ம் தேதி வரை நடைபெற உள்ளது.

வேலூர் நெடுஞ்சாலை கோட்டத்தில் வேலூர், காட்பாடி, குடியாத்தம் உள்பட 120 இடங்களில் வாகன கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. வேலூர் கோட்ைட சுற்றுச்சாலையில் நடந்த கணக்கெடுப்பு பணியை வேலூர் கோட்ட பொறியாளர் சரவணன் ஆய்வு செய்தார். அப்போது, வாகனங்களின் எண்ணிக்கையை சரியாக குறிக்கும்படி ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது உதவி கோட்ட பொறியாளர் பிரகாஷ் உடன் இருந்தார்.

ஆய்வு குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘வாகன போக்குவரத்தின் எண்ணிக்கை ஏற்ப சாலை பாரமரிப்பை துரிதப்படுத்தவும், சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற அரசு செய்யவும், இணைப்பு சாலை அமைப்பது, பாலங்கள் கட்டுவது, விபத்து தடுப்பு அறிவிப்பு பலகைகளை வைப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளுக்கு கணக்கெடுப்பு உதவியாக இருக்கும்’ என்றனர்.

Related Stories: