×

பிளஸ்2, 10ம் வகுப்பை தொடர்ந்து நெல்லை,தென்காசி, தூத்துக்குடியில் பிளஸ்1 தேர்வுகள் தொடங்கின-மாணவர்கள் உற்சாகமாக எழுதினர்

நெல்லை :  தமிழகம், புதுவையில் பிளஸ்2, 10ம் வகுப்புகளைத் தொடர்ந்து பிளஸ்1  பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி  மாவட்டங்களில் மாணவர்கள் உற்சாகமாக தேர்வு எழுதினர்.தமிழகம் மற்றும் புதுவையில் 12ம்  வகுப்பிற்கான பொதுத்தேர்வு கடந்த 5ம் தேதி தொடங்கியது. 10ம் வகுப்பு  பொதுத்தேர்வு கடந்த 6ம் தேதி தொடங்கியது.
இதைத் தொடர்ந்து பிளஸ் 1  மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்தத் தேர்வை தமிழகம்  மற்றும் புதுவையில் 8 லட்சத்து 85 ஆயிரத்து 53 மாணவ, மாணவிகள்  எழுதுகின்றனர். முதல்நாளான நேற்று தமிழ் பாடத்திற்கான தேர்வு நடந்தது.

இந்தத்  தேர்வை சந்திக்கும் மாணவர்கள் கொரோனா பரவல் காரணமாக வகுப்புகள்  நடைபெறாததால் கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வை சந்திக்கவில்லை. கடந்த சில  மாதங்களாகத்தான் நேரடியாக வகுப்புகளுக்கு வருகை தருகின்றனர். 8ம்  வகுப்பிற்கு பின்னர் நேரடியாக பிளஸ்1 பொதுத்தேர்வை சந்தித்த மாணவர்கள்  எந்தவித அச்சமுமின்றி தேர்வுக்கூடங்களுக்கு வருகை தந்தனர்.

நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை பிளஸ்1 பொதுத்தேர்வை 21  ஆயிரத்து 757 பேர் எழுதினர். இவர்களுக்காக 182 பள்ளிகளில் 73 மையங்கள்  அமைக்கப்பட்டிருந்தன. தனித்தேர்வர்களுக்கு அமைக்கப்பட்ட 3 மையங்களில்   279 தனித்தேர்வர்கள் தேர்வு எழுதினர். பாளை. மத்திய சிறையில்  அமைக்கப்பட்டுள்ள மற்றொரு மையத்தில் 7 சிறைவாசிகள் பிளஸ் 1 பொதுத்தேர்வை  எழுதினர்.

84 மாற்றுத்திறன் மாணவர்களும் தேர்வு எழுதினர். 10 தேர்வு  மையங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. தேர்வு ஏற்பாடுகளை மாவட்ட  கலெக்டர் விஷ்ணு உத்தரவுப்படி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுபாஷினி  செய்திருந்தார். தேர்வு மையத்தில் தடையின்றி மின்சாரம், குடிநீர், கழிப்பறை  உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

காப்பி அடிப்பது மற்றும்  முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்க 186 பறக்கும் படையினர் களத்தில் இருந்தனர்.   முதன்மை கண்காணிப் பாளர்கள் 73பேர், துறை அலுவலர்கள் 99 பேர், அறை  கண்காணிப்பாளர்கள் 1068 பேர் மற்றும்  பறக்கும் படையை சேர்ந்த 8 குழுவினர்,  நிலையான பறக்கும்படை அலுவலர்கள் 163 பேர் என மொத்தம் 1510 பேர் தேர்வு  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டத்தில் 63  மையங்களில் பிளஸ் 1 தேர்வை 8 ஆயிரத்து 686 மாணவர்கள், 9 ஆயிரத்து 604  மாணவிகள் என மொத்தம் 18 ஆயிரத்து 290 மாணவ, மாணவிகள் எழுதினர். தேர்வர்களை  கண்காணிக்க 96 நிற்கும் படை உறுப்பினர்கள், 10 சிறப்பு பறக்கும் படை  உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.தூத்துக்குடி  மாவட்டத்தில் 88 மையங்களில் பிளஸ்1 தேர்வை 204 பள்ளிகளில் பயிலும் 9,863  மாணவர்கள்,  11,158 மாணவிகள் என மொத்தம் 21,021 பேர் எழுதினர். தேர்வுக்கு  முன் வினாத்தாள் கட்டுகளை  22 வழித்தட அலுவலர்கள் பாதுகாப்புடன் அந்தந்த  தேர்வு மையங்களுக்கு  எடுத்துச் சென்றனர்.

தேர்வை கண்காணிக்க 155  ஆசிரியர்களை கொண்ட  பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் 88  பேர் துறை  அலுவலர்களாகவும், 88 ஆசிரியர்கள் முதன்மை  கண்காணிப்பாளர்களாகவும், 1300  ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளர்களாகவும்  நியமிக்கப்பட்டு பணியில்  இருந்தனர். தூத்துக்குடியில் பல்வேறு தேர்வு  மையங்களில் பிளஸ்1 தேர்வை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி  ஆய்வு செய்தார்.நெல்ைல, தென்காசி, தூத்துக்குடியில்  நேற்று தொடங்கிய பிளஸ் 1 தேர்வை 61 ஆயிரத்து 68 பேர் எழுதினர்.

திருப்புதல் தேர்வு வினாக்கள்

பல இடம் பெற்றன பிளஸ் 1 தமிழ் தேர்வு  வினாக்கள் குறித்து மாணவர்கள் கூறுகையில், எதிர்பார்த்ததைவிட தேர்வு  வினாக்கள் சுலபமாக இருந்தது. திருப்புதல் தேர்வுகளில் கேட்கப்பட்ட பல  கேள்விகள் இறுதித் தேர்வில் இடம் பெற்றிருந்ததால் தேர்வு எழுதுவதில் சிக்கல் எதுவும் எழவில்லை  என்றனர். வினாக்கள் குறித்து கடம்பன்குளம்  அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் முத்துக்குமார்  கூறுகையில், பிளஸ்1 தமிழ் தேர்வுக்கு வழங்கப்பட்ட வினாக்கள் மாணவர்களுக்கு எளிதாக இருந்தன. இரண்டாவது திருப்புதல் தேர்வில்  கேட்கப்பட்ட வினாக்களில் இருந்து மட்டும் சுமார் 40 சதவீத வினாக்கள்  இடம்பெற்றிருந்தன.

இதுபோல் முதல்  திருப்புதல் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களும் இடம் பெற்றிருந்தன. இவை  இரண்டிலும் அல்லாமலும் சில வினாக்கள் இடம் பெற்றிருந்தன. சிறப்பாக படித்து  பயிற்சி எடுத்த மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்க வாய்ப்புள்ளது. மெல்ல கற்கும் மாணவர்களும் பாஸ் மதிப்பெண் எடுப்பதில் சிக்கல் இருக்காது என்றார்.

Tags : Nella ,South Kasi ,Thuthukudi , Nellai: Following the Plus 2 and 10th classes in Tamil Nadu, Puthuvai, the Plus 1 general examination started yesterday. Nellai, Tenkasi, Thoothukudi
× RELATED நெல்லை மக்களவை தொகுதி பாஜ, அதிமுக வேட்பாளர்கள் சொத்து பட்டியல்